flashvortex.

Monday, March 12, 2012

அமெரிக்க சிப்பாயின் துப்பாக்கிசூட்டுக்கு ஆப்கன் நாடாளுமன்றம் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கச் சிப்பாய் ஒருவர் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இறந்த பொதுமக்களுக்கு தற்போது இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்துள்ளன.
இக்கொலைகளுக்கு பொறுப்பான நபர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்பது நிச்சயமானால், தாங்கள் இனிமேல் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதில்லை என உள்ளூர் தலைவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

நடந்தது என்ன?

நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தற்போது கூடுதலான விவரங்கள் வெளிவந்துள்ளன.
துப்பாக்கியோடு சுட்டுக்கொண்டுவந்த அந்த அமெரிக்கச் சிப்பாய் வேகமாக வீடுவீடாகச் சென்று பார்த்ததாகவும், சில வீட்டுக் கதவுகள் முடியிருப்பதைக் கண்டு மூன்று வீடுகளின் கதவை உடைத்து அவர் உள்ளே நுழைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வீட்டில், உள்ளிருந்த 11 பேர் என மொத்தக் குடும்பத்தையுமே அவர் சுட்டுச் சாகடித்துள்ளார்.
மற்ற இரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் ஐந்து பேர் என அவர் சுட்டுக் கொன்றுள்ளார்.

கொதிப்பில் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிய நாடாளுமன்றம் இந்தக் கொலைகளை கண்டித்துள்ளது. இவற்றைச் செய்த அமெரிக்க சிப்பாய் ஆப்கானிய நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்கப்பட வேண்டும் என்று அது கோரியுள்ளது.
ஆனால் அமெரிக்க சிப்பாய்கள் அனைவரையும் அமெரிக்க இராணுவமே விசாரிக்கும் என்ற இராணுவ ஒப்பந்தம் ஒன்று அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் இருந்துவருகிறது.
2014ஆம் ஆண்டுக்குப் பின்னரும் அமெரிக்கத் துருப்புகள் ஆப்கானிய மண்ணில் இருப்பதற்கு வழியேற்படுத்தும் வியூக ஒப்பந்தம் தொடர்பில் இவ்விருநாடுகள் இடையில் நடக்கக்கூடிய பேச்சுவார்த்தைகளை இச்சம்பவம் சிக்கலாக்கும் என அதிபர் கர்சாய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒபாமா அதிர்ச்சி

இதனிடையே இச்சம்பவம் தனக்கு அதிர்ச்சியையும் வருத்ததையும் தந்துள்ளதாக அமெரிக்க திபர் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்கப் படையினரின் இயல்பான நடத்தையை இந்தச் சம்பவம் எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்று அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்றும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் ஆற்றி வருகின்ற பணி இச்சம்பவத்தால் எவ்வகையிலும் பாதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யார் அந்தச் சிப்பாய்?

இந்தக் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்திய அமெரிக்க சிப்பாய் யார் என்று இன்னும் வெளியில் சொல்லப்படவில்லை.
அவர் ஒரு முப்பத்து எட்டு வயது ஆள், இரண்டு பிள்ளைகளின் தகப்பன், ஆப்கானிஸ்தானுக்கு கடமை நிமித்தமாக அவர் வந்திருப்பது இதுவே முதல் தடவை, இதற்கு முன்னாள் இவர் இராக்கில் பணியாற்றி இருந்துள்ளார் என்றெல்லாம் சில தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அவர் ஏன் இந்தக் காரியத்தை செய்தார், காரணம் என்ன என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய வேளையில் அவர் குடிபோதையில் இருந்தார், அவர் மனம் உடைந்து புத்தி பேதலித்துப் போயிருந்தார் என்றெல்லாம் ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இப்படி ஒரு தாக்குதல் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு பழிவாங்கும் விதமாக ஆப்கானில் உள்ள வெளிநாட்டினர் மீது தாக்குதலகள் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment