வெளிநாடு ஒன்றின் தலைவர் என்ற வகையில் ராஜபக்ஷ அவர்களுக்கு சட்ட விலக்கு இருப்பதாக அந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்திருக்கிறார்.
எப்படியிருந்த போதிலும், இறுதிக்கட்ட போரில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை இந்த வழக்கு மீண்டும் ஒருமுறை கோடிட்டுக் காட்டியிருக்கிறது.ராஜபக்ஷவுக்கு எதிரான இந்த வழக்கை, திருகோணமலையில் ஆறு வருடங்களுக்கு முன்னர் கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் உறவினர்களும், மூதூரில் கொல்லப்பட்ட பிரஞ்சு தொண்டு நிறுவனத்தின் பணியாளர்களின் உறவினர்களும் தாக்கல் செய்திருக்கிறார்கள்.
இந்த இரு கொலைச் சம்பவங்கள் தொடர்பாகவும் எவர் மீதும் இதுவரை குற்றம் சுமத்தப்படவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் இருந்த பாதுகாபுப் படையினரே இவர்களை கொன்றதாக வழக்காளிகள் கூறுகிறார்கள். ஆனால் அது குறித்த குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகள் மீது போடுகிறது.
2009 இல் விடுதலைப்புலிகளை இலங்கை இராணுவம் அழித்தபோது கொல்லப்பட்ட சிலரின் உறவினர்களும் இந்த வழக்கில் வழக்காளிகளாக கலந்துகொண்டிருந்தனர்.
அரசாங்கத்தால் தாக்குதல் சூனியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பகுதியின் மீது கடற்படையினர் சுட்டபோது தமது உறவினர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்க ஒபாமா நிர்வாகம், ராஜபக்ஷ அவர்கள் பதவியில் இருக்கும் வரை அவருக்கு சட்ட விலக்கு இருப்பதாக கூறுவதால், இந்த வழக்கை தாம் தள்ளுபடி செய்வதாக அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டங்களை மீறியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மிகவும் அதிர்ச்சையை தருவனவாக இருப்பதால், இந்த நடவடிக்கைகளை தான் சாதாரணமானவையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தாம் மனித உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் வன்மையாக மறுப்பதாக வாசிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் கூறியுள்ளது.
கடந்த மாதத்தில் இலங்கையின் ஒரு முன்னாள் மூத்த இராணுவ தளபதியான சவேந்திர சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஒரு சிவில் வழக்கும், அவருக்கு சட்ட விலக்கு இருப்பதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.
அவர் தற்போது ஐநாவுக்கான இலங்கையின் துணைத்தூதுவராக இருக்கிறார்.
No comments:
Post a Comment