flashvortex.

Monday, February 27, 2012

ஒசாமா பின்லாடன் பதுங்கிய வீடு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது

பாகிஸ்தான் அபோதாபாத்தில், அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் பதுங்கியிருந்த வீட்டை, அதிகாரிகள் நேற்று இடித்துத் தரைமட்டமாக்கினர். பாக்., அபோதாபாத்தில், ராணுவ அகாடமி அருகில், அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தார். மூன்று மாடிகள் கொண்ட அந்த வீட்டைச் சுற்றி அதிகமான உயரத்தில், சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது.மொத்தம் 38 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான அந்த வளாகத்தின் மத்தியில் வீடு கட்டப்பட்டிருந்தது. எட்டரை கோடி ரூபாய் மதிப்பிலான இந்த வீட்டில், பின்லாடன் பதுங்கியிருந்தபோது, கடந்த ஆண்டு மே 2ம் தேதி அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார். பின்லாடன் தாக்குதல் குறித்து நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு, இந்த வீட்டை நேரில் பார்வையிட்டது. இதில் உள்ள பொருட்கள் பத்திரமான இடங்களுக்கு அகற்றப்பட்டன. தொடர்ந்து, வீட்டை இடித்துத் தள்ளும்படி விசாரணைக் குழு உத்தரவிட்டது.

வீட்டை இடித்துத் தள்ளுவதற்கான மிகப் பெரிய கருவிகள் அனைத்தும் நேற்று முன்தினம் அப்பகுதிக்குக் கொண்டு வரப்பட்டன. நேற்று முன்தினம் மாலையில் துவங்கிய கட்டட இடிப்பு நேற்று முழுவதும் நீடித்தது. வீடு இடிப்பின்போது பத்திரிகையாளர்கள்கூட படம் எடுக்க முடியாத படி தடை விதிக்கப்பட்டது.கட்டட இடிப்பின்போது, அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர். நேற்று முன்தினம் வரை பாதுகாப்புப் படை வசம் இருந்த இந்த வீடு, இடிப்பதற்காக, அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment