இந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட பேசாப்படமான- தி ஆர்ட்டிஸ்ட் படத்துக்கு கிடைத்துள்ளது.
சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதுகளும் இந்தப் படத்தில் நடித்த ழான் டுழார்டைன் மற்றும் மிஷேல் ஹஸானவிஷியஸ் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.
1920 ஆம் ஆண்டு காலகட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தி ஆர்ட்டிஸ்ட்.
சிறந்த நடிகைக்கான விருது ‘தி அயர்ண் லேடி’ எனும் படத்தில் பிரிட்டனின் முன்னாள் பிரதமரான மார்கிரெட் தாட்சர் வேடத்தில் நடித்த மெரில் ஸ்ட்ரீப்புக்கு கிடைத்துள்ளது.
கனடா நாட்டைச் சேர்ந்த 82 வயதான கிறிஸ்டோஃபர் பிளம்மர் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெறுகிறார். பிகினர்ஸ் எனும் திரைப்படத்தில் அவரது நடிப்புக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
மிக அதிக வயதில் ஆஸ்கார் விருது பெற்றவர் என்கிற பெருமையையும் கிறிஸ்டோஃபர் பிளம்மருக்கு கிடைத்துள்ளது.

இந்த விருதுக்கும் பெல்ஜியம் மற்றும் போலந்து நாட்டிலிருந்து வந்திருந்த படங்களும் போட்டியிட்டன.
அமெரிக்க வீட்டுப் பணிப்பெண்ணாக தி ஹெல்ப் படத்தில் நடித்த அக்டோவியா ஸ்பென்சர் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் கறுப்பின மக்கள் தமது சிவில் உரிமைகளுக்காக போராடிய காலகட்டத்தை மையப்படுத்தி தி ஹெல்ப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
1929 ஆம் ஆண்டு முதல் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வந்தாலும், பேசாப்படம் ஒன்று திரைப்படத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கார் விருதைப் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ட்டின் ஸ்கோர்சேசேயின் முப்பரிமாணப் படமான ஹியூகோ தொழில்நுட்பப் பிரிவுகளில் ஐந்து விருதுகளை வென்றது.
தி ஆர்ட்டிஸ்ட் படம் ஏழு வாரங்களில் லாஸ் ஏஞ்ஜலஸ் நகரின் ஒரு இடத்தில் படமாக்கப்பட்டது. இப்படம் மேலும் சில விருதுகளையும் பெற்றது.
பாகிஸ்தானின் பெண் இயக்குநர் ஷர்மீன் ஒபைத் சினாய் இயக்கிய சேவிங் ஃபேஸ் எனும் படம் சிறந்த விவரணப் படத்துக்கான(டாக்குமெண்டரி) விருதை பெற்றுள்ளது. இந்தப் படத்ததை அவர் அமெரிக்காவில் இருக்கும் டேனியேல் ஜங்கேயுடன் இணைந்து இயக்கியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டிலிருந்து ஒருவர் ஆஸ்கார் விருது பெறுவது இதுவே முதல் முறை.
அந்நாட்டில் இளம் பெண்கள் மீது திராவகம் ஊற்றப்படுவதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த விவரணப் படம் அங்குள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் முகமது ஜவாத் அப்படி பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவம் செய்வதை கருவாகக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment