flashvortex.

Monday, February 27, 2012

ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகும் களச் சமர் - வெல்லப் போவது யார்?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் பெரும் பரபரப்புடன் ஆரம்பமாகவுள்ளது.

இதன் போது சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ளது. 

இன்றுகாலை 10.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை பிளெனரி கூட்ட அறையில் ஆரம்பநிகழ்வு இடம்பெறும்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தலைவர் Laura Lasserre Dupuy, ஐ.நா பொதுச்சபையின் தலைவர் நசீர் அப்துல் அசிஸ் அல்-நாசர், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சுவிற்சர்லாந்தின் வெளிவிவகார திணைக்களத் தலைவர் Didier Burkhalter ஆகியோர் இந்தக் கூட்டத்துக்கு முன்னிலை வகிப்பர்.

காலை 10.40 மணி தொடக்கம் 12 மணி வரை உயர்மட்ட பிரமுகர்களின் உரைகள் இடம்பெறும்.

இதில் ஒவ்வொரு நாட்டினதும் சார்பில் பங்கேற்கும் உயர்மட்டப் பிரதிநிதிக்கு உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மதியஉணவை அடுத்து பிற்பகல்12.30 மணியளவில் குழுநிலை விவாதம் ஆரம்பமாகும்.

அதன்போது ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தொடக்க அறிக்கையை வெளியிடுவார்.

பிற்பகல் 2.30 மணிவரை நடைபெறும் இந்த விவாதத்தை அடுத்து மீண்டும் உயர்மட்டப் பிரமுகர்களின் உரைகள் இடம்பெறும்.

இதன்போது சிறிலங்காவின் சார்பில் உரையாற்ற பிற்பகல் 2.50 மணியளவில் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவரது உரைக்கு 10 நிமிடங்கள் நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அவர் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து சுருக்கமாக விளக்கமளிக்கவுள்ளார்.

உயர்மட்டப் பிரமுகர்களின் உரையுடன் இன்றைய அமர்வுகள் நிறைவடையும்.

வாரத்தில் 5 நாட்கள் வீதம் நான்கு வாரங்களுக்கு இந்தக் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

பேரவைக் கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானங்களை மார்ச் 15ம் நாள் பிற்பகல் 1 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment