flashvortex.

Saturday, February 25, 2012

முல்லைப்பெரியாறு: ஆனந்த் குழுக் கூட்டம் திடீர் ரத்து

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்தி வரும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் குழுவின் கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 26) கூடுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

 அணைப் பகுதியில் துளையிட்டு நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. அதன் அறிக்கை வந்தவுடன் ஆனந்த் குழு தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.

 இந்த நடைமுறைகளுக்கு சில காலம் ஆகும் என்பதால் அதிகாரமளிக்கப்பட்ட தங்கள் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு ஆனந்த் குழு கடிதம் அனுப்பியிருந்தது.

 இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கூடவிருந்த ஆனந்த் குழுவின் கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் செயலர் சத்பால் உறுதி செய்தார். அணைப் பகுதியில் ஆய்வு செய்து வரும் குழுவின் பணி இன்னும் முடிவடையவில்லை. அதனால் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

 இந்த நிலையில், அதிகாரமளிக்கப்பட்ட ஆனந்த் குழுவின் பதவிக் காலம் பிப்ரவரி 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இந்தக் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே. ஜெயின் இடம்பெற்றுள்ள ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பிப்ரவரி 27-ம் தேதி முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment