flashvortex.

Friday, February 10, 2012

வயது சர்ச்சை: இராணுவத் தளபதியின் கோரிக்கை நிராகரிப்பு

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் வி.கே. சிங்கின் வயது தொடர்பான சர்ச்சையில், நீதிமன்றத் தீர்ப்பு அவருக்கு சாதகமாக அமையவில்லை. அந்த விடயத்தில் அரசு எடுத்த நிலைப்பாடு சரி என்று நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

1950ஆம் ஆண்டு அவர் பிறந்தாரா அல்லது 1951ஆண்டு அவர் பிறந்தாரா என்பதுதான் சர்ச்சை.தான் பிறந்த ஆண்டு 1951 என ஜெனரல் சிங் கூறிவந்தார். ஆனால் அவர் பிறந்தது 1950ல்தான் என அரசு உறுதியாக இருந்தது. அதையடுத்து, உச்சநீதிமன்றத்தை வி.கே. சிங் நாடினார் .
நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான பெஞ்ச் முன்பு இறுதி விசாரணை நடைபெற்றது. ராணுவத் தளபதி கோருவதுபோல, அதிகாரப்பூர்வ ஆவணங்களில், தனது பிறந்த ஆண்டு 1951 ஆகக் கருதப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இதில் நீதிமன்றம் தலையிடுவதற்கு முகாந்திரம் இல்லை என்று குறிப்பிட்டார்கள்.
அதனால், அவர் தனது மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வாய்ப்பளிப்பதாகவும் இல்லாவிட்டால், உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்தார்கள்.
இதைத் தொடர்ந்து இராணுவத் தளபதி தனது மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். அதையடுத்து, மனு திரும்பப் பெறப்பட்டதாகக் கருதி, தள்ளுபடி செய்யப்பட்டது.
சர்ச்சை முடிவுக்கு வந்ததை அடுத்து, இந்த ஆண்டு மே மாதம் அவர் ஓய்வு பெறுவது உறுதியாகிவிட்டது.
அதே நேரத்தில், ஜெனரல் சிங் மீது அரசாங்கம் முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அவர் எப்போதும் போல இராணுவத் தளபதியாகப் பணியாற்றுவதை உறுதி செய்ய விரும்புவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
ஆவணங்களை முதலிலேயே திருத்தத் தவறியது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவரது பிறந்த ஆண்டு 1950 எனிராணுவ ஆவணங்களில் பதிவு செய்தது தவறில்லை என்று தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment