flashvortex.

Friday, February 10, 2012

மஹிந்த ராஐபக்ஷ நிர்வாக ரகசியங்களை வெளியிட்ட இராணுவ பேச்சாளர்

மஹிந்த ராஐபக்சவின் நிர்வாக ரகசிங்களை சிரேஸ்ட மேஜர் ஜெனரல் ஒருவர் அமெரிக்காவிற்கு வழங்கியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
 
முன்னாள் இராணுவப் பேச்சாளரும், இராணுவ ஊடகப் பிரிவின் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, சில முக்கியமான தகவல்களை அமெரிக்காவிற்கு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 

பிரதான சமிக்ஞை அதிகாரியாகவும், பாதுகாப்பு அமைச்சின் அபிவிருத்தி மற்றும் ஆய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாகவும், யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த மூன்று படையணிகளின் கட்டளைத் தளபதியாகவும் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கடமையாற்றியுள்ளார்.
 
அரசியல் கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரல்கள் என்ற தலைப்பில் இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டது.
 
ராஜபக்ஷ நிர்வாகத்தின் இரகசிய தகவல்களை வழங்கும் உளவாளியாக பிரசாத் சமரசிங்க கடமையாற்றினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்கத் தூதரகத்தின் ஜேம்ஸ் டி மூர் என்ற அதிகாரியினால் இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்படுவோர் அனைவரும் மெய்யான குற்றவாளிகள் கிடையாது என அரசாங்க உள்ளக தகவல்கள் குறிப்பிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட சிலர் கடத்தல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக பிரசாத் சமரசிங்க குறிப்பிட்டார் என அந்த குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கடத்தல் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படுவதாக சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் மிகுந்த கரிசனை கொண்டிருந்ததாக பிரசாத் சமரசிங்க தெரிவித்தார் என விக்கிலீக்ஸ்சை மேற்கோள் காட்டி GTN செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment