flashvortex.

Sunday, April 1, 2012

இன்பத்தை மட்டும் நாடும் மனித மனம்....


நாம் சிரிக்கும் போது உலகமும் நம்மோடு சேர்ந்து சிரிக்கும், அதுவே அழ ஆரம்பித்தோமானால் துணைக்கு யாரும் வர மாட்டார்கள். எவையெல்லாம் மகிழ்ச்சியாக, கலகலப்பாக இருக்கிறதோ அதன் பக்கமாக சாயவே மனித மனங்கள் விரும்புகின்றது, வெறுப்படைந்த முகங்களை யாருக்கும் விரும்ப தோன்றுவதில்லை, மகிழ்ச்சியும், முகமலர்ச்சியும், புன்முறுவலும் எங்கே உள்ளதோ அங்கே செல்லும்படிதான் மனம் நமக்கு கட்டளையிடும். 

முக மலர்ச்சியானது அன்பு, மகிழ்ச்சி, தயை, இன்பம் ஆகிய நல்லுணர்வுகளை வெளிப்படுத்துகிறது. அதுவே ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்துகொள்ளவும், நன்றி செலுத்தவும், வாழ்த்து தெரிவிக்கவும் வழி வகுக்கிறது. நீங்கள் செல்லும் திசையெங்கும் புன்முறுவலை பரப்புங்கள் மனதின் நல்லுணர்வுகளை முகத்தில் பிரதிபலியுங்கள், குழந்தைகளை போல பலனை எதிர்பாராமல் சிரியுங்கள். பூக்களை சுற்றிலும் நறுமணம் பரவியிருப்பதை போல உங்களை சுற்றிலும் மகிழ்ச்சியின் மணம் பரவட்டும்.
 
செய்யும் வேலைகள் கடினமாக இருக்கட்டும், பார்க்கும் மனிதர்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கட்டும், போகும் பாதைகள் கரடுமுரடாக இருக்கட்டும் அவைகளை மகிழ்ச்சியுடன் அணுகுங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகளுக்கு அவையெல்லாம் அடிமைப்பட்டு விடும். எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க முடிகிறதோ, இல்லையோ உங்கள் முயற்சி இடைவிடாத மகிழ்ச்சியை உணர கூடியதாகவே இருக்கட்டும்.
 
இயற்கையாக இருப்பவையெல்லாம் மகிழ்ச்சியாகவே இருக்கிறது, மரம், செடி, கொடிகள், கடல், வானம், நிலவு என்று அனைத்தும் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறது, நாமும் இயற்கையிலே சுதந்திரமான, கட்டுகளற்ற மகிழ்ச்சியின் சுபாவங்களை கொண்டவர்களாகும். நம் எண்ணங்களினால், நமக்கு வரும் அனுபவங்களை எடுத்துக்கொள்ளும் விதத்தினால் இயற்கையின் இயல்புகளை இழந்து பயம், முக இறுக்கம் என்று இயற்கைக்கு மாறான வேறு ஒரு இயல்பில், நம்மை மாற்றி வைத்துள்ளோம். 
 
இயற்கையின் குணாதிசயங்கள் நம்மிலே வெளிப்படவில்லை என்றாலும் இன்னும் அவைகள் நம்மிலேதான் வாசம் செய்து கொண்டிருக்கிறது வேண்டாத தூசிகளை தட்டி மீண்டும் அவைகளை வெளிக்கொண்டு வருவோம். நதியை போல, காற்றை போல, வானத்தை போல, பறவைகளை போல இயற்கையின் மகிழ்ச்சியை பூரணமாக அனுபவிப்போம்.
 
நம்மை ஒருவன் திட்டினால் நல்லவேளை அடிக்காமல் விட்டானே என்று சந்தோஷப் படுவோம், அடித்து விட்டானென்றால் நல்லவேளை கொல்லாமல் விட்டானே என்று சந்தோஷப் படுவோம், கொன்று விட்டால் இந்த கேடுகெட்ட உலகத்திலிருந்து விடுதலை வாங்கி தந்தானே என்று சந்தோஷப் படுவோம், எதிலும் இறுக்கம் கொள்ளாமல் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியை பரப்பிக் கொண்டிருப்போம்.

No comments:

Post a Comment