flashvortex.

Thursday, April 5, 2012

டில்லியை நோக்கி ராணுவம் அணிவகுத்தது ஏன்?ராணுவப் புரட்சி முயற்சி நடக்கவில்லை: மன்மோகன் சிங்

இந்திய ராணுவத்தின் இரண்டு படைப்பிரிவு, தலைநகர் டில்லிக்குள் கவச வாகனங்கள் சகிதமாக நுழைய முயன்றதாக வந்த செய்தி, உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசைக் கைப்பற்ற ராணுவம் நடத்திய சதியா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இந்த செய்தியை பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவம் ஆகிய மூன்று தரப்புமே, அவசரமாக, "அடிப்படையற்ற தகவல்' என மறுத்துள்ளன. மத்திய அரசு முழு விளக்கமளிக்க வேண்டுமென்று பா.ஜ.,கோரிக்கை வைத்துள்ளது. அரியானா மாநிலம் ஹிசார் அருகில், இந்திய ராணுவப் படையின் ஒரு பிரிவு உள்ளது. 


லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சிங் மற்றும் மொத்தம் 450 வீரர்களைக் கொண்ட இந்த படைப்பிரிவு வீரர்கள், கடந்த ஜனவரி 16ம் தேதி இரவு மற்றும் 17ம் தேதி அதிகாலை வேளையில், தலைநகர் டில்லிக்குள் நுழைய முயன்றது. ஹிசாரில் கிளம்பி, டில்லிக்கு அருகே உள்ள நஜப்கார் என்ற இடம் வரை வந்துள்ளது. அதேபோல, ஆக்ராவில் உள்ள பாராஸ் என்ற பாராசூட் ராணுவப் படையும், டில்லியை ஒட்டி அமைந்துள்ள பாலம் விமான நிலையம் அருகே உள்ள பகுதி வரை வந்துள்ளது. இந்த தகவல்களை, டில்லியில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கில நாளிதழ் நேற்று காலை வெளியிட்ட செய்தியால், அரசு வட்டாரங்கள் உச்சகட்ட பரபரப்பை எட்டின. கடந்த ஜனவரி 16ம் தேதி அன்று தான் ராணுவத் தலைமை தளபதி வி.கே.சிங்கின் வயது சான்றிதழ் குறித்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. 



இந்த சமயத்தில் நகருக்குள் நுழைந்து, ராணுவப் புரட்சி மூலம், அரசாங்கத்தை ராணுவம் கையில் எடுத்துக் கொள்ளும் வகையில் இந்த ஒத்திகை முயற்சிகள் நடந்தனவா என்ற சந்தேகத்தையும் அதிகஅளவில் அந்த பீதி நிறைந்த செய்தி கிளப்பியிருந்தது.அதே சமயம், குறிப்பிட்ட நாளில் அன்றைய தினம், டில்லி நகரின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் நடந்துள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் தடுப்புகள் வைத்து போக்குவரத்து நடமாட்டத்தை மிகவும் குறைப்பதற்கு, டில்லி போலீஸ் தரப்பில் நடவடிக்கைகள் நடந்துள்ளதாகவும், அது பிரதமர் அலுவலக அளவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்றும் அந்த செய்தி விவரித்துள்ளது. பரபரப்பான செய்தியாக இது வெளியானதும், நேற்று காலை, முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., சார்பில் நிருபர்களிடம் மூத்த தலைவர் பல்வீர்புஞ்ச் பேசினார். "இந்த செய்தி குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்திட வேண்டும். ராணுவத்துக்கும், அரசுக்கும்
 
இடையில் இடைவெளி அதிகரிக்க காரணமே அந்தோணி தான். அவர் பதவி விலக வேண்டும். அதை அவர் செய்யாவிட்டால், பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும்'என்றார்.

ஆதாரமற்ற செய்தி: இந்த செய்தி குறித்து ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பத்ம விருது நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங், "ஆதாரமற்ற செய்தி இது. எந்த அடிப்படையில் இந்த செய்திக்கு முக்கியத்துவம் அளிக்க முடியும் பொருத்தமற்ற இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள இயலாது. இதுகுறித்து பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது. நாட்டின் ராணுவத் தலைமை தளபதி என்பது உயரிய பதவி. அதை இது போன்ற செய்திகளால் அவரையும், அப்பதவியையும் கொச்சைப்படுத்தக் கூடாது' என்று தெரிவித்தார். நேற்று காலையில் விசாகப்பட்டினத்தில் பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி இருந்தார். அங்கு, "ஐஎன்எஸ் சக்ரா' என்ற அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் துவங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அந்தோணி, "ஆதாரமற்ற முற்றிலும் பொய்யான செய்தி. இதுகுறித்து ராணுவம் தரப்பிலும் விளக்கம் அளித்துவிட்டது. வழக்கமான பயிற்சிக்காக ராணுவம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பெயர்வது தான் அது. டில்லியை நோக்கி ராணுவ நகர்வு நடப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று என்பதல்ல. ராணுவத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். ராணுவத்தின் தேசபக்தியை சந்தேகிக்க முடியாது. இந்தியாவின் ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை ஆகியவற்றை நினைத்து உண்மையில் பெருமைப்படுகிறேன். அரசாங்கத்திற்கும், ராணுவத்திற்கும் இடையிலான உறவு நல்ல முறையில் இருந்து வருகிறது' என்றார்.

திரித்த செய்தி: இப்பரபரப்பு செய்தி ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ள விளக்கத்தில், "அடிப்படையற்ற தகவல். ராணுவப் படையினரின் வழக்கமான இடப்பெயர்வு நடவடிக்கை தான் அன்றும் நடந்துள்ளது. அதை பெரிதுபடுத்தி திரித்து செய்தி வெளியாகியுள்ளது. இந்திய ராணுவம்
என்பது பெருமைக்கும், கண்ணியத்துக்கும் உரியது. அரசாங்கத்தின் நிர்வாக விஷயங்களில் எக்காலத்திலும் குறுக்கிடவோ, தலையிடவோ ராணுவத்துக்கு துளி கூட விருப்பம் இருந்ததில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், பார்லிமென்ட் கமிட்டி அழைப்பை ஏற்று ராணுவச் செயலர், நடந்ததை விளக்கினார். இச்செய்தியால் அர்த்தமற்ற புரளி வெளிநாடுகளுக்கு சென்றிருக்கும் என்று வேதனையைத் தெரிவித்தார்.
ராணுவம் பலிகடாவா :இச்செய்தி குறித்து பாஜ., செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:நாட்டின் பாதுகாப்பிற்கு ராணுவத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. அது, வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது. எனவே, ராணுவத்தின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அரசுக்கும், ராணுவத்திற்கும் உள்ள உறவு மோசமாக உள்ளதையே இது காட்டுகிறது. நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய வகையில், இந்திய ராணுவம் பற்றி திட்டமிட்டு உருவாக்கப்பட்ட செய்திகளுக்கு, எந்த சூழ்நிலையிலும் முக்கியத்துவம் தரக்கூடாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வலுவற்ற தலைமையே, ராணுவத்தைப் பற்றிய மோசமான செய்தி வருவதற்கு காரணம். அரசின் மோசமான செயல்பாடுகளுக்கு, ராணுவம் பலிகடா ஆக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரசாத் கூறினார்

No comments:

Post a Comment