flashvortex.

Thursday, April 5, 2012

2ஜி ஊழல்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறு ஆய்வு கோரிய 10 மனுக்கள் தள்ளுபடி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 11 மனுக்களில், பத்து மனுக்களை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், ஏழு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்களை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ராஜா மீது வழக்கு தொடர்வதற்கு அனுமதி அளிப்பதில், பிரதமர் அலுவலகம் தாமதம் செய்தது தொடர்பான விவகாரத்தில், "அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் போன்ற பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு எதிராக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அனுமதி கேட்டு, மனு தாக்கல் செய்யப்பட்ட மூன்று மாதங்களுக்குள், அனுமதி வழங்கப்பட வேண்டும். கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் எடுத்துக் கொண்டு, அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்கலாம். நான்கு மாதங்களுக்குள் கண்டிப்பாக அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி, அனுமதி கொடுக்காவிட்டால், நான்காவது மாதத்துக்கு பின், தானாகவே அனுமதி கிடைத்ததாக எடுத்துக் கொள்ளப்படும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

மறு ஆய்வு மனு:இதையடுத்து, இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, மத்திய அரசு, தொலை தொடர்பு நிறுவனங்கள், முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் சார்பில், 11 மறு ஆய்வு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. முன்னாள் அமைச்சர் ராஜா தாக்கல் செய்த மனுவில், "தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்களை ரத்து செய்தது, இயற்கை நீதியை மீறிய செயல்' என, கூறப்பட்டு இருந்தது.

டிஸ்மிஸ் இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ராதாகிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்களை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி, தொலை தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனு, அரசு ஊழியர்களுக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனு உட்பட, 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. முன்னாள் அமைச்சர் ராஜா தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது."முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது சட்ட விரோதமானது' என, கடந்த பிப்ரவரி 2ல் அளித்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை மட்டும், வரும் 13ம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment