flashvortex.

Saturday, April 14, 2012

1514 பேரை பலிகொண்ட டைட்டானிக் கப்பல் விபத்து: நாளை 100-வது ஆண்டு நிறைவுநாள்


1514 பேரை பலி கொண்ட டைட்டானிக் கப்பல் மூழ்கி நாளையுடன் 100-வது ஆண்டு நிறைவடைகிறது. 'மிதக்கும் சொர்க்கம்' என்று அழைக்கப்பட்ட 'டைட்டானிக்' என்ற பயணிகள் கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல், 10-ந் தேதி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்ப்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு தனது பயணத்தை தொடங்கியது.
 
செர்பர்க், பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தில் உள்ள குவினல் டவுன் (கோப்க்) வழியாக நியூயார்க்கை சென்றடைய போக்குவரத்து வழி வகுக்கப்பட்டிருந்தது.
 
அந்த கப்பலில் 28 நாடுகளை சேர்ந்த 1296 பயணிகள் இருந்தனர். அவர்களில் 416 பேர் பெண்கள், 768 பேர் ஆண்கள், 112 பேர் குழந்தைகள், 13 தேனிலவு தம்பதிகள் இருந்தனர். இவர்கள் தவிர 918 கப்பல் ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 7 கண்காணிப்பு அதிகாரிகள். 23 பெண் என்ஜினீயர்கள், 28 ஆண் என்ஜினீயர்கள், 289 பாய்லர் மற்றும் என்ஜின்மேன்கள், 491 சர்வீஸ் ஊழியர்கள், 7 தச்சு தொழிலாளர்கள் அடங்குவர்.
 
சவுதாம்ப்டனில் இருந்து முதல் பயணத்தை தொடங்கிய டைட்டானிக் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்தது. 4 நாள் கழித்து அதாவது ஏப்ரல் 14-ந் தேதி நள்ளிரவு 11.40 மணியளவில் டைட்டானிக் கப்பல் பனிப்பாறை மீது மோதியது.
 
இதனால் ஓட்டை விழுந்து கடல்நீர் கப்பலுக்குள் புகுந்தது. இதனால் கப்பல் மூழ்கத் தொடங்கியது. உடனே பயணிகள் உயிர்க்காக்க பயன் படுத்தும் சிறிய படகுகள் மூலம் கடலில் இறக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். இருந்தும் 711 பேரை மட்டுமே உயிருடன் காப்பாற்ற முடிந்தது.
 
ஏப்ரல் 15-ந் தேதி அதிகாலை 2.20 மணிக்கு டைட்டானிக் கப்பல் முழுவதும் மூழ்கியது. மேலும் கப்பலில் இருந்த 1514 பேர் பலியாகினர். டைட்டானிக் கப்பல் மூழ்கி நாளையுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.
 
இதைத் தொடர்ந்து அந்த கப்பல் மூழ்கிய இடத்தில் அஞ்சலி செலுத்த சவுதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து ஒரு பயணிகள் கப்பல் புறப்பட்டு சென்றுள்ளது. அதில் டைட்டானிக் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் உள்பட 1514 பேர் புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தில் நாளை (15-ந் தேதி) அதிகாலை 2.20 மணிக்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

No comments:

Post a Comment