flashvortex.

Saturday, April 14, 2012

ஷாருக் கானுக்கு அவமதிப்பு: அமெரிக்காவிடம் முறையிட அரசு முடிவு

அமெரிக்காவில் நியூயார்க் விமான நிலையத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்ட விவகாரத்தை இந்தியா சற்று கடுமையாக அணுகவுள்ளது. தடுத்து நிறுத்துவதும் பின்பு மன்னிப்புக் கேட்பதுமே அமெரிக்காவிற்கு வாடிக்கையாகிவிட்டது என்று இந்தியா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கத் தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதுபோன்ற விவகாரங்கள் தொடரக் கூடாது. இந்த விவகாரத்தை அமெரிக்க உயரதிகாரிகளிடம் கொண்டு செல்லப்போவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இயந்திரத்தனமாக மன்னிப்புக் கேட்பது போதாது என்றும் இந்தியா கருத்துக் கூறியுள்ளது. அமெரிக்க உயரதிகாரிகளின் நிலையில் இந்த விவகாரத்தை கொண்டு செல்லுமாறு அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

யேல் பல்கலைக்கழக நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தனியார் விமானத்தில் அமெரிக்கா சென்றார். மன்ஹாட்டனிலிருந்து 53 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒயிட் பிளெய்ன்ஸ் விமான நிலையத்தில், குடியேற்ற அதிகாரிகளால் அவர் 2 மணி நேரத்துக்கு தடுத்து வைக்கப்பட்டார்.

பின்பு இந்தியத் தூதரகம் தலையிட்டு அவரை விடுவித்தது. இதையடுத்து இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மன்னிப்புக் கடிதம் ஒன்றை வழங்கினர்.

கிருஷ்ணா காட்டம்: இது குறித்துப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, "தடுத்து வைப்பதும் பின்பு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதுமே அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இது தொடரக் கூடாது' என்று தெரிவித்தார்.

ஒரே நபருக்கு இதுபோன்று தொடர்ந்து நடப்பதும், பின்பு தூதரக அதிகாரிகள் தலையிட்டவுடன் மன்னிப்புக் கேட்பதும் போதுமானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

தூதரக அதிகாரிக்கு சம்மன்: இது தொடர்பாக தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் துணை அதிகாரி டொனால்ட் லுவுக்கு, வெளியுறவுத்துறை இணைச் செயலர் (அமெரிக்கப் பிராந்தியம்) ஜாவேத் அஷ்ரப் சம்மன் அனுப்பினார். இதற்கிடையில் அமெரிக்க விமான நிலையத்தில் 2 மணி நேரம் தடுத்து வைத்ததற்காக ஷாரூக் கானிடம் அமெரிக்கத் தூதரகம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது. தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் ரூமேன், "அமெரிக்கர்கள் நிறைய பேர் இந்தியத் திரைப்படங்களுக்கு ரசிகர்களாக உள்ளனர். சிறந்த நடிகரான ஷாரூக் கானை மதிக்கின்றனர்' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment