flashvortex.

Sunday, April 1, 2012

ஆதரவு தேடும் அன்பு தந்த கரங்கள்


சிறுவயது முதல் கண்ணை இமை காப்பது போல அந்திபகலாய் ஆதரித்து இன்று ஆதரிக்க யாருமின்றி பல துன்பங்களுடனும் ஏக்கங்களுடனும் வாழும் எம் உறவுகளாம் முதியவர்களின் நிலையை யார் தான் கண்டு கொள்கிறார்கள்.

பத்து மாதம் வயிற்றிலே சுமந்தாள் அன்னை. நெஞ்சிலே சுமந்தார் தந்தை. இவர்களை சுமக்க யாரும் இல்லாமல் முதியோர் இல்லங்களே இருக்கின்றன சமுதாயத்திலே....

வாழ்க்கைக்கு வித்திட்டு வாழ்வாங்கு வழிகாட்டி வாழ வைத்த தொழுகைகுரியவர்களை இன்றைய தலைமுறைகள் கண்ணெடுத்தும் பார்க்காமல் வயோதிபர் என பட்டம் சூட்டி இன்று வயோதிபர் இல்லங்களுக்கு அனுப்பி விடுகின்றனர்.


எமது உறவுகளை வயோதிபர் எனவும் பாரமாகவும் நினைக்கும் பிள்ளைகளை அவர்களும் தமக்கு பிள்ளைகள் பாரம் என நினைத்திருந்தால் இவர்கள் தான் எங்கே? முதியோர் இல்லங்கள் தான் எங்கே?
அன்னையாய் தன்தையாய் அறிவுக்கும் ஆசானாய் இனிய கதைகள் சொல்லும் பாட்டனாய் பாட்டியாய் பக்குவாமாக பல விடயம் கூறி விட்டு இன்று பாதை தெரியாமல் தவிக்கும் முதியவர்கள் ஏராளம்.

எமது பிள்ளைகள் இவர்களின் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என நினைத்து ஓடியோடி உழைத்து ஓடாய் தேய்ந்து சமுதாயத்தில் நல்ல நிலையில் வைத்தவர்களுக்கு செய்யும் கைம்மாறு நன்றி கடன் என்ன தெரியுமாஅவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைப்பதுதான். எல்லோரும் ஒருகணம் சிந்திக்க வேண்டும் எம் கைபற்றி நடை பயில வைத்தவர்களை அவர் கோலுன்றி வரும் பொது பரிகாசம் செய்வதும் தூற்றுவதும்  அவர்களது மனம் நோகும்படி நடப்பதும் போன்ற காரியங்களை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதனால் அவர்களின் மனது எவ்வளவு வேதனைப்படும் என்பதனை நீங்களும் வயோதிபர் ஆகும் காலத்தில் உணர்ந்து கொள்ள நேரிடும்உறவுகள் மீது இருந்த பற்றும், பாசமும் தற்போது பணத்தின் மீது சென்றுவிட்டது. வாழ்க்கைக்கு பணம் தேவை தான். ஆனால், பணமே வாழ்க்கையாகி விடக் கூடாது என்பதை உணர வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்கு எத்தனை தியாகங்களை செய்கின்றனர் என்பதை  எல்லாம் எண்ணிப் பார்த்து அவர்களிடம் பாசத்தோடும், அன்போடும் நடந்து கொள்ள வேண்டும்.

சிலர் உயர் கல்வி பயில்வதற்காக வெளி நாடுகளுக்குச் செல்கின்றனர். கல்வி பயின்ற பின் அங்கேயே நல்ல வேலை தேடிக் கொள்கின்றனர். பின்னர் திருமணம் செய்துகொண்டு அங்கேயே குடும்பத்துடன் இருந்து விடுகின்றனர்.வெளிநாடுகளின் கலாசார தாக்கத்தால், பெரியவர்களை மதிக்க வேண்டும் என்ற கோட்பாடு மறையத்தொடங்கியுள்ளதுஇதன் விளைவாக வயதான தாய், தந்தையர் முதியோர் இல்லத்தையே தங்கள் சொந்த இல்லமாக நினைத்து வாழ வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.
ஒவ்வொரு தாய் தந்தையரும் தமது பிள்ளைகளை பெற்று வளர்க்கும் போது கடைசிகாலத்தில் தன்னுடன் இருப்பான் என நினைத்து தான் பாசத்தை ஊட்டி வளர்க்கிறார்கள். அவர்களுக்கு எத்தனை கனவுகள் இருக்கும் ஆனால் அதை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காத இன்றைய தலைமுறை தமது ஆசைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பெற்றோரும் மகனின் விருப்பம் எதுவோ அதற்கேற்றால் போல நடக்கின்றனர். பிள்ளைகளும் ஒருகணம் சிந்திக்க வேண்டும் பெற்றோரை தனியாக தவிக்க விட்டு விட்டு வெளிநாட்டுக்கு செல்வது அவசியம் தானா என்று?

ஒவ்வொரு முதியோர் இல்லங்களில் இருக்கும் வயோதிபர்களின் கண்ணீருக்கு பின்னால் எத்தனை கதைகள் இருக்கும். எவ்வளவு ஏக்கம் இருக்கும். பேரப்பிள்ளைகளை கொஞ்சி விளையாடும் நேரத்திலே இந்த முதியோர் இல்லங்கள் அவசியம் தானா? தாய் தந்தையரை பாரம் என நினைப்பவன் இந்த பூமியிலே வாழ்ந்து எதனை சாதிக்க போகிறான்?

" தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லை
 தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை"

என்ற கருத்தை எல்லோரும் மனதிலே வைத்திருந்தால் இந்த முதியோர் இல்லங்களுக்கான தேவை இன்று இல்லை. அன்பு என்றால் அம்மா பாசம் என்றால் தந்தை என்று எல்லோரும் கூறுவார்கள். இது வாய்வார்த்தை என்பதனை இந்த சமுதாயத்தில் இருக்கும் முதியோர் இல்லங்களை பார்த்தால் தெரிந்துவிடும்.

கடைசி காலத்தில் எந்த ஒரு பெற்றோரும் தமது பிள்ளைகளுடனும் பேரப்பிள்ளைகளுடனும் தான் கழிக்க விரும்புவார்கள். ஆனால் இன்று யாரும் அற்றவர்களாய் வாய்பேச மடந்தையர்களாய் கண்மூடி தனமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்று சொன்னால் மிகையாகாது.

இந்நிலை மாற வேண்டும். முதியவர்களை இன்பமுற வாழ வைக்க வேண்டும். நம்மைப் பெற்றவர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீரை பார்ப்பதற்கு நாம் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் .முதியோர் இல்லங்களே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும்.

காவோலை விழ குருத்தோலை சிரித்தது என்ற பழமொழிக்கு இணங்க எதிர்காலத்தில் நாமும் இந்த நிலையில் தான் இருக்க போகின்றோம் என்பதை மனதில் கொண்டால் இந்த முதியோர் இல்லங்கள் ஏன் இருக்க போகின்றது சமுதாயத்தில்? கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யாமல் தாய் தந்தையரை அரவணைத்து நடந்தால் வாழ்வில் வெற்றிகள் சூழும்

No comments:

Post a Comment