flashvortex.

Thursday, April 5, 2012

விஜயகாந்துக்குத் தடை நீங்கியது

சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு விதிக்கப்பட்டிருந்த 10 நாள்கள் தடை நீங்கியது.

வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 9) நடைபெறும் பேரவைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கலாம்.

சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்தில் விஜயகாந்த் பேசும்போது அவருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நேரடி வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அவை விதிகளுக்கு முரணாக நடந்துகொண்டதாக அவர் மீது அதிமுக உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக உரிமை மீறல் குழு விசாரித்து அவரை 10 நாள்கள் சஸ்பெண்ட் செய்தது. அதனைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் மற்றும் பேரவை உறுப்பினருக்கான சலுகைகள் அனைத்தும் தாற்காலிகமாகப் பறிக்கப்பட்டன. எதிர்க்கட்சிக் தலைவருக்கான காரையும் விஜயகாந்த் தலைமைச் செயலகத்தில் ஒப்படைத்தார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் இப்போது பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்க முடியவில்லை. அவருக்கான தடை புதன்கிழமை (ஏப்ரல் 4) முடிவடைந்தது.

எனவே ஏப்ரல் 9-ம் தேதி முதல் நடைபெறும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அவர் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment