flashvortex.

Sunday, April 1, 2012

நாட்டில் மறுபடியும் குழப்பநிலை உருவாக விடமாட்டேன் : கண்டியில் ஜனாதிபதி மஹிந்த

நாட்டில் மறுபடியும் குழப்பநிலையை உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அரச சார்பற்ற நிறுவனங்கள் பின்னிலையிலிருந்து செயற்பட்டு வருகின்றன. இவ்வாறானவர்களுக்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறினார்.

கண்டி போகம்பறை மைதானத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அங்கு சுருக்கமாக உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது

இந்த உயர்ந்த மண்ணிலிருந்து நான் உரையாற்றுகிறேன். மக்கள் ஆதரவுடன் வெற்றியை நோக்கி சென்றுள்ளோம். எமது வெற்றியை சிறுமைப்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன. அதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.

லிபியாவின் தலைவர் கடாபியை போன்று வீதியில் இழுத்து சென்று நாட்டு தலைவரை பழிவாங்குவதற்கு இந்த  நாட்டு மக்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள்.

ஏகாகிபத்தியவாதிகள் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னிருந்தே எமது நாட்டை கைப்பற்ற முயற்சித்தனர். ஒல்லாந்தர், போர்த்துகேயர், ஆங்கிலேயர் என பலர் பல முறை முயற்சி செய்த போதும் அவர்களால் எம் மத்தியில் ஒற்றுமை இருக்கும் வரைக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனாலும் நாட்டின் சில பிரதானிகள் அன்றைய அரசருக்கு எதிராக ஆங்கிலேயரிடம் நாட்டை காட்டிக் கொடுத்ததன் காரணமாகவே ஆங்கிலேயரால்  எம்மை ஆள முடிந்தது.

ஏகாதிபத்தியவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் எதிராகவே இன்று இங்கு பல்லாயிரக்கனக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளீர்கள்.

இந்த நாட்டை அபிவிருத்தி செய்து எதிர்கால சந்ததியிடம் கையளிப்பேன். இதுவே எனது முக்கிய பணியாக இருக்கின்றது. ஜெனீவா தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காது இவ்வாறு ஜனாதிபதி அங்கு கூறினார்.
 

No comments:

Post a Comment