flashvortex.

Tuesday, April 3, 2012

“லஷ்கர் இ தயிபா தலைவரை பிடித்தால் 10 மில்லியன் டாலர்கள்”


பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர் இ தயிபா அமைப்பின் நிறுவனர் ஹஃபீஸ் முகமது சயீதை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
லஷ்கர் இ தயிபா அமைப்பின் முகம் என்று பரந்துபட்ட அளவில் பார்க்கப்படும் ஜமாத் உத் தாவா அமைப்புக்கு தற்போது அவர் தலைவராக இருக்கிறார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு லஷ்கர் இ தயிபா அமைப்பே காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சயீதின் மைத்துனர் மற்றும் லஷ்கர் அமைப்பின் இணை நிறுவனருமான அப்துல் ரஹ்மான் மக்கியின் தலைக்கு இரண்டு மில்லியன் டாலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜமாத் உத் தாவா மற்றும் லஷ்கர் இ தயிபா அமைப்புகள் அமெரிக்க அரசால் தீவிரவாத அமைப்புகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளன.
அவர்கள் இருவரையும் பிடிக்கவோ அல்லது பிடிக்கப்படுவதற்கான தகவல்களை அளிப்பவர்களுக்கோ இந்தப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 165 பேர் கொல்லப்பட்டனர். எதிர்தாக்குதலில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன் தாக்குதலை நடத்திய ஒரு பாகிஸ்தானியப் பிரஜையான அஜ்மல் கசாப் உயிருடன் பிடிக்கப்பட்டார்.

"மிகவும் தேடப்படுபவர்"


இந்தியாவால் “மிகவும் தேடப்படுபவர்கள்” என்று பாகிஸ்தானிடம் கையளிக்கப்பட்டுள்ள பட்டியிலில் சயீதின் பெயர் முக்கியமாக இடம்பெற்றுள்ளது.
ஆனால் தீவிரவாதத்தை முன்னெடுக்கும் ஒரு அமைப்பாக தாங்கள் செயல்படுவதாக கூறப்படுவதை ஜமாத் உத் தாவா மறுக்கிறது.
மும்பையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானால் ஹஃபீஸ் முகமது சயீது கைது செய்யப்பட்டாலும், குற்றச்சாட்டு ஏதும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டார்.
அவர் அரபு மொழி மற்றும் பொறியியல் துறையில் பேராசிரியராக இருந்தார் என்றும், கடும்போக்கு தியோபந்தி இஸ்லாமிய அமைப்பான ஜமாத் உத் தாவா அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர் என்றும் அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பல பகுதிகளில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த தியோபந்தி இஸ்லாமிய அமைப்பான ஜமாத் உத் தாவா தன்னை அர்பணித்துள்ளது என்றும், அதன் இராணுவப் பிரிவே லஷ்கர் இ தயிபா என்றும் அந்த இணையதளம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியா வரவேற்பு


சயீதையும் அவரது மைத்துனரையும் பிடித்துக் கொடுப்பதற்கு அமெரிக்க அரசு பரிசை அறிவித்துள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது.
மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்குள்ள அர்பணிப்பையே இது வெளிக்காட்டுகிறது எனவும், தொடர்ந்து தீவிரவாதத்தை எதிர்த்து போராட இருநாடுகளும் உறுதி பூண்டுள்ளதை எடுத்துக்காட்டுகிறது எனவும் இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.
லஷ்கர் இ தயிபா மற்றும் அதன் உறுப்பினர்கள், போஷகர்களுக்கு ஒரு கடுமையான சமிஞ்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும், தீவிரவாதத்தை எதிர்ப்பதில் சர்வதேச சமூகம் தொடர்ந்து ஒற்றுமையுடன் இருக்கிறது என்பதையும் அமெரிக்காவின் நிலைப்பாடு மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போலும் மும்பை தாக்குதல்கள் தொடர்பில் சயீதுக்கு எதிராக பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.
கடந்த 2010 ஆம் அண்டு விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க ராஜதந்திர தகவல் பரிமாற்றங்களில், ஹஃபீஸ் சயீத் மற்றும் லஷ்கர் இ தயிபா அமைப்பின் தலைவர் ரஹ்மான் லக்வி ஆகியோர் தொடர்ந்து அந்த அமைப்பை நடத்துவதாகவும், மும்பைத் தாக்குதலுக்கு பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டாலும் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார்கள் என்று தெரிவித்ததாகவும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன்கூறியது.
தெற்காசியாவில் லஷ்கர் இ தயிபாவின் தாக்குதல்களை லக்வி மற்றும் சயீத் ஆகியோர் திட்டமிட்டு, முன்னிருந்து நிறைவேற்றினார்கள் என்று அந்த விக்கிலீக்ஸ் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது

No comments:

Post a Comment