flashvortex.

Monday, January 2, 2012

கிராமியங்களில் களைகட்டும் காவடி

  தொன்மை மிக்க மதமாக இந்து மதம் விளங்குகின்றது. இத்தகைய பெருமை வாய்ந்த சைவ சமயத்துக்கும் காவடிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கிராமிய கலை வடிவங்களாக கோலாட்டம், கரகாட்டம், செம்புநடனம், கும்மியாட்டம்,காவடி என்பன உள்ளன. இவற்றில் காவடி பற்றி நோக்குவது சிறப்பானதாகும்.
                   மாயோனும் சேயோனும் தொல்காப்பியத்தை கண்டுரைத்த பின்னரே காவடி என்ற பதம் உருவானது. காவூதடி என்ற பதம் மருவி காவடி என்ற பதமாக தோற்றம் பெற்றுள்ளது. காவடி பற்றி மறைமலைஅடிகளார் பல கருத்துக்கனை முன் வைத்துள்ளார். அதாவது ஆரம்பத்தில் ஆதிவாசிகள் விலங்குகளை வேட்டையாடி காவுதடியில் கட்டி எட்டிய தூரம் வரை கொண்டு சென்றுள்ளார்கள். பாரம் தூக்கியாக பாவித்த காவு+தடியே காலப்போக்கில் முருகன் ஆலய பால் காவடியாக உருவம் பெற்றுள்ளது. 


 காவடி என்ற ஆட்டக் கருவியை தோளில் சுமந்து கொண்டு நாதஸ்வர மேளத்தின் இசைக்கேற்ப ஆடப்படும் ஆட்டம் காவடியாட்டம் எனப்படுகின்றது. முதன்முதலில் காவடியை இடும்பன் எடுத்ததாக புராணக்கதைகள் கூறுகின்றன. இக்கதை முருகனருள் என்ற புராணக்கதையில் உள்ளது. காவடி எடுக்கும் போது பக்தர்கள் விரதம் அனுஸ்ரிப்பார்கள்.



                 காவடியின் இரு முனைகளிலும் மயிலிறகு கட்டி நாகபடத்தை நாவிலும் அலகிலும் குத்தி செடில் ஏற்றி கயிற்றால் பிடித்து மேளம் நாதஸ்வரத்துடன் பாடல் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் வீதியிலே பவனி வருகின்றது. பெணகள்; தலையிலே பாற் செம்பு தூக்கிக் கொண்டு காவடிகளுடன் செல்வார். நேர்த்திக் கடனுக்காக ஆரம்பித்த பாற்காவடி பலவித வடிவமும் ஆட்டமும் பெறத் தொடங்கியது. பின்னைய காலங்களில் எங்கே முருகன் ஆலயம் இருக்கின்றதோ அங்கே காவடி என்றிருந்தது. ஆனால் இன்று கோயில்களில் உற்சவம் என்றால் அங்கே காவடிகளை காணமுடியும். 
                    பாற்காவடி, பன்னீர்க்காவடி என்று ஆரம்பித்த காவடிகள் இன்று பறவைக்காவடி, தூக்குக்காவடி, சந்தனக்காவடி, மச்சக்காவடி, மயில்க்காவடி, சர்ப்பக்காவடி என்று பல வகை உள்ளன. இக்காவடிகள் உலகம் முழுவதும் விரிந்தது நேர்த்தியினாலேயே ஆகும். காவடியாட்டம் முருகன் கோயிலில் மட்டுமன்றி எல்லாக் கோயிலிலும் நேர்த்திக்காக எடுக்கப்படுகின்றது. அதிலும் அம்மன் ஆலயங்களில் பொங்கல் நேரங்களில் அதிகமான காவடிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
                       காவடிகளை அளவெட்டி, குரும்பசிட்டி, இணுவில், சுழிபுரம், தாவடி, மீசாலை,வடமராட்சி போன்ற இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
           இதைத்தவிர இந்தியாவில் அறுபடை முருகன் கோயிலில் அதிகமான பக்தர்கள் தம் நேர்த்திக்கடன்களை காவடி மூலம் செலுத்துகின்றனர்.                                காவடிகள் தனியே நாதஸ்வரத்துடனும் மேளத்துடனும் ஆடப்படுவதில்லை. பறைமேளத்துடனும் ஆடப்படுகின்றன. உதாரணமாக சன்னதி முருகன் கோயிலில் காவடிகள் பறைமேளத்துடனும் ஆடப்படுகின்றன. 

                    தூக்குக்காவடி எனப்படுவது முற்செடில்களை ஒருவரின் முதுகில் குத்தி பின் வண்டியொன்றின் மீது ஏற்றி அவரை சுமந்து ஊர்வலம் அழைத்துச் செல்வதாகும். இக்காவடி வீதிவழியே வரும் போது பக்திப் பாடல்களை ஒலிபரப்பு செய்து கொண்டு வருவார்கள். அதுமட்டுமல்லாது காவடிகள் எடுக்கும் போது பக்தர்கள் தமது நேர்த்திக் கடனுக்கேற்ப செடில்களை தமது உடலில் ஏற்றிக் கொள்வார்கள். பாற்காவடியை இளம்வயதினரில் இருந்து பெரியவர்வரை அனைவராலும் ஆடப்படும். 
                 காவடிகளை ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் எடுப்பது குறிப்பிடத்தக்கது. 
                    இன்று பாடசாலைகளிலும் முக்கியவிழாக்களிலும் ஊர்வலங்களிலும் மேடை நிகழ்வுகளிலும் காவடியாட்டம் வளர்ந்திருப்பது பாரம்பரிய கலைகளின் உயிரோட்டத்துக்கு வலுச் சேர்க்கின்றது என்றால் மிகையாகாது. 

No comments:

Post a Comment