
தற்கால சமுதாய நிலையில் காதல் திருமணங்கள் பற்றி முதிர்ந்த வயதுள்ளவர்களை கேட்டால் “எல்லாம் கலிகாலம்” என நொந்து கொள்வார்கள். உண்மையில் அனைத்து யுகத்திலும் காதல் திருமணம் இருந்தது என்பதற்கான ஆதாரம் உள்ளது. நவீன நாகரீகம் படைத்தவர்கள் எனும் பெயரில் மேற்கத்திய உடையில் வலம் வரும் இளைய சமுதாயம் பழைய காலம் என்பது காதலுக்கு எதிரானது என்ற புரிதலில் உள்ளார்கள்.
அடிப்படையில் தற்காலத்தில் காதல் உணர்வு வருவதற்கு முற்காலத்தில் முன்னோர்களின் செயலால் நம்முள் ஏற்பட்ட சமஸ்காரங்கள் பரம்பரையாக தொடர்ந்து வருவதே காரணம். கலியுகம் என கூறும் முதியவர்களுக்கும், பழங்காலம் எனும் இளைய சமுதாயத்திற்கும் தெரிவிக்க வேண்டிய ஓர் விஷயம் உண்டு.
துவாபரயுகத்தில் பகவான் ஸ்ரீராமரும், திருதாயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணரும் செய்தது என்ன? காதல் என்பது யுக யுகாந்திரமாக தொடர்வது. 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் காதல் இருந்திருக்கிறது. காதல் திருமணங்களும் நடந்திருக்கிறது. மனித இனம் தோன்றியதும் முதலில் இருந்தது காதலும், அதனால் இணைதலும் தானே? பின்பு நாகரீகம் என்ற பெயரில் அன்பு வர்த்தகமாக மாற்றமடைந்ததும் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது..!
இதன் மூலம் காதல் திருமணம் மட்டுமே நல்லது என கூறவில்லை. திருமண முறைகளில் அதுவும் ஒரு வகை. அதனால் கீழாக பார்த்து ஒதுக்கும் கலாச்சாரம் நம்மில் உள்ளது, அதை களைய வேண்டும் என்பதே என் கோரிக்கை. பலர் காதல் திருமணம் என்பதை கந்தர்வ விவாகம் என புராணங்களில் கூறப்பட்டதாக விளக்குகிறார்கள். கந்தர்வ திருமணம் கூறப்பட்டதை தற்காலத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
மேலை நாட்டில் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம்கள் அரிது. இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால் அங்கே பிரிவுகளும் அதிகம். இந்தியாவில் நிச்சயக்கப்பட்ட திருமணம் ஒருவிதத்தில் பிரிவுகளையும் பல துணை தேடும் நோக்கத்தையும் தடை செய்கிறது.
இதனால் காதல் திருமணம் நல்லதா அல்லது நிச்சயக்கப்பட்ட திருமணம் நல்லதா என்ற விவாதத்திற்கு வரவில்லை. எத்தகைய திருமணமாக இருந்தாலும் அடிப்படையில் இருவரின் உள்ளப் புரிதலே தேவை. அதனாலேயே மணவாழ்க்கை நிலை பெற முடியும்.
No comments:
Post a Comment