flashvortex.

Wednesday, January 4, 2012

பெண்களுக்கு உதவிபுரியும் மாதர் சங்கங்கள்!

பெண்கள் நாட்டின் கண்கள் என்பது மூச்சுக்கு மூச்சு ஆண்களால் முன்வைக்கப்படும் புகழ்ச்சி. ஆனால் உண்மை நிலை என்பது வழமைக்கு மாறாகவே உள்ளது. எமது நாட்டை பொறுத்தவரை குறிப்பாக தமிழ் சமுகத்தை பொறுத்தவரை ஆணாதிக்கம் என்பது நேரடியாகவும் மறைமுகமாகவும் பெண்கள் மீது தாக்கம் செலுத்துகின்றது. பெண்ணின் சபை உரிமைகள் மீறப்படுகின்றன. இந்த மறுப்பின் விளைவும் பெண்களின் எழுச்சி மற்றும் தன்னம்பிக்கையின் அடுத்தபடியே மாதர் சங்கங்களின் தோற்றம். இச் சங்கங்கள் விவசாயம், விலங்கு, வேளான்மை, சிறுகைத்தொழில், மீன்பிடி போன்ற தொழில்களுக்கு இந்நிறுவனங்கள் கடனுதவிகள் வழங்குகின்றன. இக் கடனுதவியைப் பெற்று பெண்கள் வாழ்வில் உயர வேண்டும் என்பதே இவர்களது குறிக்கோளாகும்.
இதைத் தவிர பிரதானமாக பெண்களின் வருமானத்தை அதிகரிப்பதன் ஊடாக குடும்ப வருமானத்தை அதிகரிப்பதன் ஊடாக குடும்ப வருமானத்தை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல், குடும்ப சேமிப்பை ஊக்குவித்தல், உள்ளுர் உற்பத்தியை ஊக்குவித்தல், பொழுதுபோக்குடனான வருமானம், தனியாரிடம் இருந்து அதிக வட்டிக்கு கடன் பெறுதலை குறைத்தல் போன்றன மாதர் சங்கங்களின் பிரதான நோக்கங்களாகும்.

இச்சங்கங்களின் வேலைத்திட்டங்களாக சுயதொழில் கடன் வழங்கல், பயிற்சிகள், விழிப்புணர்வு, கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல், ஏனைய உதவி நிறுவனங்களின் வேலைத்திட்டங்களுக்கு உதவுதல், விழாக்களை நடத்துதல், பிரதேச ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் உதவுதல் போன்றனவாகும்.

பல்வேறு திட்டங்களின் ஊடாக கிடைக்கப் பெற்ற நிதியைப் பயன்படுத்தி பருத்தித்துறையில் 31மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் தமது அங்கத்தவர்களின் குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு குறைந்த வட்டியில் நம்பிக்கைய பொறுப்பின் அடிப்படையில் இலகு கடன் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இத்திட்டங்களில் பலவகைத் திட்டங்கள் பெண்களுக்கு கடனுதவி கொடுத்து உதவுகின்றன. உதாரணமாக நெக்டெப் திட்டம் 35000000ரூபாவை கடனுதவியாக வழங்கியுள்ளது. இதைத் தவிர நியாப், கமநெகும, யு.என்.எச்.சி, யு.என்.டி.பி, சேவாலங்கா, டி.ஆர்.டி திட்டங்கள் பல பெண்களுக்கு கடனுதவி வழங்கி வருகின்றன. இதுவரைக்கும் இத் திட்டங்களினால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட முழுத்தொகை 8604200 ரூபா ஆகும். இதன் மூலம் 3389 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

இந் நிறுவனங்கள் கிராம மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் மற்றும் கலாசார பாரம்பரிய முறைகளை பேணும் நோக்கில் சமய கலாசார விழாக்களை நடாத்தி வருகின்றன. இதைத் தவிர ஒளிவிழா, சரஸ்வதிபூஜை, பொங்கல்விழா, மாணவர்கௌரவிப்பு, சேவைநலன் பாராட்டு போன்ற நிகழ்வுகளையும் நடாத்தி வருகின்றன. இதேபோல சுகாதார, தொழிற்திறன் தொடர்பான கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்து வருகின்றன.

இவை மட்டுமல்லாது பெண்களின் திறன்களை வளர்க்கும் நோக்குடன் பயிற்சிகளும் நடாத்தப்படுகின்றன. இதில் கணணிப்பயிற்சி, தையல்பயிற்சி, வெல்வெற் பொம்மை செய்யும் பயிற்சி, அழகுக்கலைபயிற்சி, கழிவுக்கடதாசியில் பொம்மை செய்யும் பயிற்சி, பற்றிக் பெயின்ரிங் போன்ற பல பயிற்சிகளை பெண்களுக்காக இந் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இத் திட்டம் குறித்து புலோலி வடமேற்கு மாதர் சங்க உறுப்பினர் பிரதீபா கூறுகையில் இத் திட்டத்தினால் பல பெண்கள் பயனடைந்துள்ளனர். கணவனை இழந்த பெண்கள் சுயமாக வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடிகின்றது. இத்திட்டங்களும் சங்கங்களும் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடவேண்டும் என்று தெரிவித்தார்.

இந் நிறுவனங்கள் ஏனைய நிறுவனங்களின் வேலைத்திட்டங்களுக்கு உதவுகின்றன. இவை சொண்ட், இதம், vogt , சேவாலங்கா, கொமர்சியல்வங்கி, இலங்கைவங்கி போன்றவற்றுடன் இணைந்து பிரதேச வேலைத் திட்டங்களுக்கு  உதவுகின்றன. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை ஆற்றுப்படுத்துகை,உதாரணமாக கெருடாவில் தெற்கு, புலோலி வடக்கு, புலோலி தென்மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுடன் இணைந்து இதம் நிறுவனம் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுபோல பல நிறுவனங்கள் இம் மாதர் சங்கங்களோடு இணைந்து பணிபுரிகின்றன. இது போன்ற சங்கங்கள் எப்பொழுதும் பெண்கள் நலனுக்கு உதவி புரியவேண்டும்.        

2 comments: