flashvortex.

Wednesday, January 4, 2012

மீள் குடியேறிய பின்னும் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் அரியாலை வசந்தபுர மக்கள்!


அரியாலை வசந்த புரம் மக்கள் பலவருட இடப்பெயர்வின் பின்னர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதும் இதுவரை அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.


1990களில் உள்நாட்டு யுத்தம் காரணமாக தமது இருப்பிடங்களைவிட்டு புலம் பெயர்ந்து சென்ற மக்கள் இந்தியாவிலும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தஞ்சமடைந்திருந்தனர்.  20 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வசந்தபுர மக்கள் குடியேறியுள்ளனர்.


1990களில் இந்த இடத்தில் 350 குடும்பங்கள் வரையில் இருந்துள்ளனர். யுத்தம் ஏற்படுத்திய தொடர் இடப்பெயர்வுகள் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் நாடு கடந்தும் குடியேறிய மக்கள் கால மாற்றத்தால் அங்கேயே நிரந்தர வாசியாகவும் மாறிவிட்டனர். தற்போது சுமார் 38 குடும்பங்களைச்சேர்ந்த மக்களே அரியாலையில்  வசிக்கின்றனர். 


ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற மக்களின் மலசலங்கள் இங்கே தான் கொண்டு வந்து புதைப்பார்கள் என்று அங்கிருக்கும் மக்கள் தெரிவித்தனர். இப்படிப்பட்ட இடத்தில் தான் நாம் வாழுகின்றோம் என அங்கிருந்த வேலு கூறினார்.


நாம் வசிக்கும் இடங்களுக்கு இன்னும் பட்டாவே அரசு தரவில்லை. இதனாலேயே இன்னும் வீடு கூட கட்ட முடியாத நிலையில் இருக்கின்றோம் என கூறினார்கள். 
பெரும்பாலானவர்களின் வாழ்வாதார தொழிலாக கடற்தொழில் உள்ளது. வார நாட்களில் மூன்று நாட்களே கடலுக்குச் செல்ல அனுமதி கொடுக்கப்படுகின்றது. அதில் வரும் வருமானத்தைக் கொண்டே அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை இவர்களுக்கு உள்ளது. ஒரு வயிறு கஞ்சியே இவர்களுக்கு உணவாக இருக்கின்றது. 3 நாட்களின் வருமானத்தைக் கொண்டே 1கிழமைக்கான உனவை நாம் சாப்பிடுகின்றோம். அதிலும் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தண்ணீர் குடித்து உறங்கின நாட்களும் உண்டு என மதிவதனி கூறினார்.


தமது சொந்த இடங்களுக்கு மீள் குடியேறிய சந்தோசம் மட்டும் தான் முகங்களில் காணப்படுகின்றது. அடிப்படை வசதிகள் இல்லாவிட்டால் மனிதன் எவ்வாறு வாழ முடியும்? ஆனால் அரியாலை வசந்தபுர மக்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலே வாழ்க்கையை நடாத்தி வருகின்றனர்.....மழை காலத்தில் இருப்பதற்கே முடியாத நிலை இவர்களது வாழ்க்கை.....


அதைத்தவிர குடிநீர் கிணறுகள் மழைகாலத்தில் நிரம்பி வழிகின்றன. அக்கிராமத்துக்கே ஒரு குடிநீர் கிணறுதான் உள்ளது. 


பெண்பிள்ளைகள் இன்னும் நிரந்தரமாக வசிப்பதற்குரிய வகையி;ல் மலசலகூட வசதிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. 38 குடும்பங்களுக்கும் ஒரே ஒரு மலசலகூடம் தான் இருக்கின்றது.


இவர்கள் எல்லோரும் ஏக்கத்துடனேயே தமது வாழ்க்கையை வாழ்கிறார்கள். எத்தனையோ பிரச்சனைகள் இவர்கள் மத்தியில்............இவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?



மீள் குடியேற்றிய பின் மக்கள் வாழும் பகுதிகள்




















No comments:

Post a Comment