flashvortex.

Sunday, December 25, 2011

போதைக்கு அடிமையாகும் பேதைகள்!

எங்கு பார்த்தாலும் இன்று போதைப் பொருளின் ஆதிக்கம் தான் நிறைந்துள்ளது. பாடசாலை மாணவர்களில் இருந்து வேலை செய்பவர்கள் வரை போதைக்கு அடிமையாகி உள்ளார்கள். போதை பொருளின் பாவனைக்கு அடிமையாகி தமது வாழ்வை தொலைத்தவர்கள் ஏராளமானோர்.

போதைப் பொருள் என்றால் என்னவென்று பார்த்தால் போதையை ஏற்றிக் கொள்வதற்காகவும் சிலரால் பொழுது போக்கிற்காகவும் உள்ளெடுக்கப்படுபவை. இந்த போதைப் பொருட்களில் மதுபானம், புகையிலை, கஞ்சா, சிகரெட், போன்ற போதை தரும் பல வகையான போதைப் பொருட்கள் இன்று பாவனையில் உள்ளன. 

பாடசாலை மாணவர்கள் தான் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக போதைப் பொருள் பாவனைக்கு ஆளாகி வருகின்றனர் என்ற செய்திகள் பத்திரிகைகளில் இடம்பெற்று வருகின்றன. பாடசாலைகாலங்களில் தீய நண்பர்களின் உறவினாலும் ஒன்றை செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வேகத்தினாலுமே மாணவர்கள் தீய பழக்கத்திற்கு ஆளாகின்றனர். இளவயதில் ஆரம்பித்த இந்தப்பழக்கம் காலம் செல்ல செல்ல பழக்கத்திற்கு வருகின்றது. மது பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் எத்தனையானோர் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.

வேலை செய்பவர்கள் தமது உடல் வலியை மறப்பதற்காக போதைப் பொருளை பாவிப்பதாக கூறுவார்கள். எல்லோருக்கும் சுலபமாகவும் பரவலாகவும்; கிடைத்து விடும் இந்தப் போதைப் பொருள்தான் சாராயம் போன்ற மது வகைகள் மற்றும் சிகரட். இந்தப் பழக்கத்தை பள்ளிகளில் படிக்கும் காலத்திலேயே ஆரம்பித்து விடுகின்றதை நம் கண்களினால் காணமுடிகின்றது. இதற்குக் காரணம் ஆங்காங்கே அமைந்திருக்கும் மதுபானக் கடைகளும் இதற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமும்தான்.

திரைப்படங்கள் மகிழ்ச்சி மற்றும் துக்க வேளைகளில் மது தேவை என்ற மனோநிலைக்கு ஆளாக்கி உள்ளது என்றால் மிகையாகாது. படங்களில் சிறிய அளவில்தான் தடை போடுகிறார்கள். ஆனால் படங்கள் முழுவதும் போதைப் பொருளின் ஆதிக்கம் தான் நிறைந்திருக்கும்.

போதைப் பொருள் பழக்கம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். இது தனிமனிதனை மட்டுமல்லாது குடும்பம் சமுதாயம் நாடு போன்ற பலபடிகளில் பிரச்சனைகளை தோற்றுவிக்கும். இவற்றின் பயன்பாட்டால் மூளையில் மாற்றம் ஏற்படுகின்றது. இந்தப் பிரச்சனையினால் வேறு பல நோய்களும் ஞாபக மறதி போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.

போதைப் பொருளை பாவிக்கும் ஒருவர் நாளாந்தச் செயற்பாடுகளை சரியாக செய்து முடிக்காத நிலைக்கு ஆட்படுகின்றான். இவர்களின் குடும்ப வாழ்க்கை, சமுதாய அந்தஸ்து, வேலை செய்யும் இடங்களில், நண்பர்கள்,; உறவினர்களின் மத்தியில் இருந்து விரிசல் ஏற்படும் வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.

போதைபொருளுக்கு அடிமையானவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் போல ஆகிவிடுவார்கள். போதைப் பொருளை பாவித்தால் தான் எந்த வேலையானாலும் செய்து முடிக்கமுடியும் என்ற நிலையில் காணப்படுவார்கள்.

போதைப் பொருளை ஒழிக்கும் வகையில் கடந்த 1987ம்; ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் திகதி போதைப் பொருள் பாவனை ஒழிப்புத்திட்டம் அனுஸ்ரிக்கப்பட தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26ம் திகதி போதைப் பொருள் எதிர்ப்பு தினம் அனுஸ்ரிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment