flashvortex.

Monday, December 12, 2011

உலக சீரீஸ் ஹாக்கிப் போட்டிகள் ஒத்திவைப்பு

இந்தியாவில் இந்த மாதம் 17 ஆம் தேதி தொடங்கவிருந்த உலக சீரீஸ் ஹாக்கிப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஹாக்கி விளையாட்டை யார் நிர்வகத்து நடத்துவது என்பது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பன்னாட்டு வீரர்கள் பங்குபெறவிருந்த இந்த உலக ஹாக்கி சீரீஸ் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக போட்டிகளை நடத்தும் நிம்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

நிம்பஸ் நிறுவனம் இந்திய ஹாக்கி சம்மேளனத்துடன் இணைந்து இந்தப் போட்டிகளை நடத்தவிருந்தது.தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்தப் போட்டிகள், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் இடம்பெற்ற பிறகு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை நிம்பஸ் நிறுவனத்தின் பேச்சாளர் கார்ல் டி கோஸ்ட்டா தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு அமைப்புகளான ஹாக்கி இந்தியாவும், இந்திய ஹாக்கி சம்மேளனமும் எதிரும் புதிருமாக இருக்கும் நிலையில், இடையே சிக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டும், ஹாக்கி விளையாட்டு வீரர்களும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.


இந்திய ஹாக்கி சம்மேளனம் மீது ஊழல் புகார்கள் எழுந்த நிலையில், அந்த அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்த சர்வதேச ஹாக்கி சம்மேளனம் அதன் பிறகு ஹாக்கி இந்தியா அமைப்பையே தாங்கள் அங்கீகரிப்பதாக தெரிவித்தது.
எனினும் இந்திய ஹாக்கி சம்மேளனம் நீதிமன்றம் சென்று தனக்கு சாதகமான உத்தரவைப் பெற,  இந்தியாவில் ஹாக்கி நிர்வாகம் யார் கையில் என்பது தொடர்பில் சிக்கல் எழுந்தது.இரு அமைப்புகளையும் ஒன்றிணைக்க இந்திய விளையாட்டு அமைச்சகம் எடுத்த முயற்சிகளும் பயனளிக்கவில்லை.

இதனிடையே, இந்த உலக ஹாக்கி சீரீஸ் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்கள், இனி இந்திய அணிக்கு தேர்தெடுக்கப்படும் வாய்ப்பை இழப்பார்கள் என்று ஹாக்கி இந்தியா அறிவித்தது.

ஆனால் ஹாக்கி இந்தியாவின் இந்த நடவடிக்கை ஒரு தனிப்பட்ட நபரின் மனித உரிமைகளை மீறும் செயல் என்றும், அவ்வாறாக ஹாக்கி இந்தியா செய்யுமாயின் தாங்கள் நீதிமன்றம் செல்லப் போவதாகவும் நிம்பஸ் கூறியது.
மோதல்கள் வலுத்துக் கொண்டிருந்த நிலையில், முன்னர் இந்த உலக சீரீஸ் ஹாக்கி போட்டிகளில் விளையாட முன்வந்த சில வீரர்கள் அதிலிருந்து விலகினர்.

இப்படியான சூழலில் திட்டமிட்டபடி இந்த உலக சீரீஸ் ஹாக்கிப் போட்டிகள் நடைபெறுமா என்கிற கேள்விக் குறிகள் தொடர்ந்து இருந்து வந்தன. ஒத்திவக்கப்பட்டுள்ள இந்தப் போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று நிம்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சீரீஸ் ஹாக்கிப் போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த உரிமையாளர்களின் எட்டு அணிகள் பங்குபெறவிருந்தன. இதில் இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் பிரபல பன்னாட்டு வீரர்களும் பங்குபெற ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.

No comments:

Post a Comment