flashvortex.

Thursday, December 1, 2011

மைக்கேல் ஜாக்சன் குடும்ப டாக்டருக்கு 4 ஆண்டுகள் சிறை ; நியூயார்க் கோர்ட் உத்தரவு!

பிரபல பாப் பாடகர், மைக்கேல் ஜாக்சன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அவரது குடும்ப டாக்டர் கான்ராட் முர்ரேக்கு, நான்கு ஆண்டுகள், சிறைத் தண்டனை விதித்து, நியூயார்க் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டார்.

என்ன நடந்தது? : கடந்த 2009, ஜூன் 25ம் தேதி, மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்தார். அவர் இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன், அவரது குடும்ப டாக்டர் கான்ராட் முர்ரே, 58, அவரைப் பரிசோதித்து விட்டுச் சென்றார். பிரேத பரிசோதனையில், அளவுக்கு அதிகமாக, "ப்ரோபோபோல்' என்ற வலி நிவாரணி அவர் உடம்பில் இருந்தது தெரியவந்தது.


இதனால், அவரது இதயத்தில், அடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாகத் தெரியவந்தது. 2009, ஆக., 28ல் அதிகாரப்பூர்வ பிரேத பரிசோதனையில், ஜாக்சனின் மரணம் கொலை எனக் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, முர்ரே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரணையில் முர்ரே, தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். 2010, பிப்., 8ல் அவர், 75 ஆயிரம் டாலர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

குற்றம் உறுதி : இவ்வழக்கு கடந்த செப்., 27ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. "ப்ரோபோபோல்' மருந்தை அளவுக்கு அதிகமாகக் கொடுத்ததால், முர்ரே கொலைக் குற்றவாளி தான் என, லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி கோர்ட் கடந்த நவ., 8ம் தேதி குற்றத்தை உறுதிப்படுத்தியது. இதையடுத்து, நேற்று முன்தினம் இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி மிக்கேல் பாஸ்டர் தன் தீர்ப்பில் டாக்டரின் நடவடிக்கைகள் குறித்து, கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் தெரிவித்தார்.

பணப் பைத்தியம் : அவர் தன் தீர்ப்பில் கூறியதாவது: முர்ரே, தான் செய்த தவறுக்காக சிறிதும் வருந்தவில்லை. தவறு செய்ததாகவே கருதவில்லை. இது மிகவும் அபாயகரமானது. டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைக்காக எலி போன்றவற்றைப் பயன்படுத்துவது போல் முர்ரே, ஜாக்சனைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வழக்கில் இவர் தொடர்ந்து பல பொய்களைக் கூறி வந்துள்ளார். ஜாக்சன் இவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை, இவர் தகர்த்தெறிந்து விட்டார். பணத்துக்காக, இவர் பைத்தியக்காரத் தனமாக நடந்து கொண்டார். இதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.

சேவையை விற்காதீர்கள் : டாக்டர்கள் தங்கள் சேவையை, அதிகபட்ச பணத்துக்கு விற்று விடக் கூடாது. "நோயாளிகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில், நான் சிகிச்சை அளிக்க மாட்டேன்' என்ற மருத்துவ உறுதிமொழியை அவர்கள் தூக்கி எறிந்து விடக்கூடாது. முர்ரே, ஜாக்சன் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வரும் ஜன., 23ம் தேதி நடக்கும் விசாரணையில் எவ்வளவு தொகை இழப்பீடு என்பது முடிவு செய்யப்படும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.

இயற்கை முரண் : மைக்கேல் ஜாக்சன் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், "ஜாக்சனின் பெற்றோர் என்ற வகையில், நாங்கள் இருந்து அவர் மரணம் அடையும் படியான சூழல் நேரும் என, நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. இது இயற்கைக்கு முரணானது. அவரது குழந்தைகள் என்ற முறையில், ஒரு நண்பராக, நல்ல தந்தையாக அவர் இல்லாமல் நாங்கள் வளரவேண்டிய சூழல் உருவாகியுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் கவுன்டி சிறையில், இரண்டு ஆண்டுக் காலமும் அதன் பின் தேசியச் சிறையில், இரண்டு ஆண்டுக் காலமும் முர்ரே தனது தண்டனையைக் கழிக்க வேண்டும்.

மைக்கேல் ஜாக்சன், தன் 50வது வயதில், முர்ரேயை குடும்ப டாக்டராக பணியில் அமர்த்தினார். மாதம் அவருக்கு, 1 லட்சத்து 50 ஆயிரம் டாலர் சம்பளம் அளித்து வந்தார். இவ்வழக்கில், ஜாக்சன் குடும்பத்தினர், 10 கோடி டாலர் இழப்பீடு கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment