flashvortex.

Tuesday, December 6, 2011

மின்சாரம் தாக்கி யானைகள் மரணம்

இலங்கையில் அம்பாறை மாவட்டம் வீரகொடை 17 ம் குடியேற்ற கிராமத்தில் திங்கட்கிழமை நள்ளிரவு மின்சாரம் தாக்கி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

இக் கிராமத்திற்குள் காட்டு யானைகள் ஊடுருவி, பொது மக்களின் பயிர்களையும் உடமைகளையும் சேதமாக்கி வருவதாக உள்ளுர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.


குறித்த யானைகள் இரண்டும் தனியார் காணியொன்றில் சுற்று வேலியில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்கியே உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தமது ஆரம்ப விசாரணைகளின் போது சந்தேகம் வெளியிட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் வேலியில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வயர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ,சந்தேகத்தின் பேரில் காணி உரிமையாளர் கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் இந்த ஆண்டு இதுவரை சுமார் 27 காட்டு யானைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் உயிரிழந்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் யானைகள் கொல்லப்படுவது வன ஜீவராசிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

நீதிமன்றத்தில் குற்றம் நிருபிக்கப்பட்டால் ரூபா ஒன்றரை லட்சம் தொடக்கம் ஐந்து லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டு தொடக்கம் ஐந்து வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கப் படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment