flashvortex.

Saturday, December 17, 2011

திருகோணேஸ்வரர் ஆலயம்

அமைவிடம்:-  திருகோணமலை

இறைவர் திருப்பெயர் : திருக்கோணேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : மாதுமையாள்
தல மரம்   : கல்லால மரம்
தீர்த்தம்    : பாவநாசம்
வழிபட்டோர்   : இராவணன் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் தமிழர்
தேவாரப் பாடல்கள்  : சம்பந்தர்

தல வரலாறு

  • இக்கோயிலின் வரலாறு 3287 ஆண்டுப் பழமை வாய்ந்ததாகும். இதற்கு திரிகூடம் என்றும் பெயருண்டு.
  • சுவாமிக்கு விளக்கேற்றுவதற்குப் போதியளவு நெய்யும் திரியும் கிடைப்பதற்கு வழிவகுத்தவர்கள், தாமரைத் தண்டின் நூலெடுத்து திரிசெய்தார்கள்; அந்த ஊர் இன்றும் “திரிதாய்” என்று வழங்குகின்றது.
  • போத்துக்கேயர் 1624 ஆம் ஆண்டில் இத்திருக்கோயிலை பாழ்செய்துள்ளனர். அன்று அருணகிரிநாதர் மனமுருகிக்கண்ட தலத்தாறு கோபுரத்தழகைப் பறங்கியர்களின் தளபதியும் பார்த்துருகியுள்ளான். அவன் தன் படையில் ஓவியம் வல்லானைக் கொண்டு அவற்றின் அழகை ஓரளவு வரைந்து எடுத்துக்கொண்ட பின்பே கோயிலைத் தரைமட்டமாக்க உத்தரவு பிறப்பித்தான்.
     
  • ravananveddu 
  • இராவணன் வெட்டு
  • அந்தக் கோபுரத்தழகைக் காட்டும் சித்திரம் இன்றும் விஸ்பன் நகரில் உள்ளது என்பர்.
  • சுதந்திரம் பெற்றபின் 1950ஆம் ஆண்டில், கோயில் இருந்த நிலத்தில் ஆலயம் அமைக்க முற்பட்டுக் காசியிலிருந்து சிவலிங்கப்பெருமானை எழுந்தருளச் செய்தார்கள்.
  • அக்காலத்தில் நகரசபையார் கிணறு தோண்ட முயன்றபோது மூன்றடி தோண்டிய வேளையில் சிவனருளோ என்று கண்டவர்கள் அதிசயிக்கும் வண்ணம் மாதுமையாள் சமேத கோணேசுவரப் பெருமானோடு, சந்திரசேகரர், பார்வதியார், பிள்ளையார், அஸ்திரதேவர் முதலாய தெய்வத்திருவுருவங்கள் வெளிப்பட்டன.
  • அவையாவும் அண்மைக் காலத்திலமைக்கப் பெற்ற திருக்கோயிலில் ஆங்காங்கே எழுந்தருளச் செய்யப்பெற்றுள்ளன.
  • முன்னொரு காலத்திலேயே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருக்கோணமலையிலே உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்தன என்பர்.
  • கோயிலை பறங்கியர் பாழ்படுத்திய வேளையில் பக்தர்களாகிய பாசுபதவிரதிகளும் பணியாளரும் பதைத்துருகித் திருக்கோயிலிலிருந்த திருவுருவங்களை எடுத்துச் சென்று அயலிலுள்ள கிணறுகளிலும் குளங்களிலும் பாதுகாப்புக்காக இட்டார்கள். அவர்கள் ஒரு திருவுருவத்தை அயலூரான தம்பலகாமம் என்னும் மருதவளம் நிறைந்த ஊரில் மறைத்து வைத்து மிகவும் இரகசியமாக வழிபாடு செய்து வந்தவர்கள்; அந்த இடத்தை ஆதிகோணநாயகர் கோயில் என வழங்கி வணங்கினார்கள். அது ஆதி கோணநாயகர் ஆலயமாகவே பழைய கோணேசுவரர் ஆலயத்துக்குச் சொந்தமான மானியங்களிற் பெரும்பகுதி தம்பலகாமத்திற்கு சேர்ந்தன.
  • முதற்பராந்தக சோழனுக்கு அஞ்சிய பாண்டியன் இலங்கையில் பாதுகாப்புக்காக புகுந்திருந்த காலத்தில் தம்பலகாமத்தில் திருப்பணிகள் செய்ததாக வரலாறு கூறுகிறது.
thampalakaamam 
தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயம்

சிறப்புக்கள்

  • உலகப்புகழ் பெற்ற திருக்கோணமலை மாவட்டத்தில் அறுபதுக்கும் அதிகமான சைவக்கோயில்கள் உள்ளன.
  • சைவம் கமழும் தமிழ்த் திருநாமங்கள் தாங்கிய பழைய ஊர்களில் செந்நெல்லும், கரும்பும், தென்னையும் செழித்து வளருகின்றன.
  • மிகப்பழைய காலத்து, இதிகாச நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்றன என்பதற்கு நிரம்பிய ஆதாரங்கள் இங்கே உள்ளன.
  • குளக்கோட்டு மன்னன் செய்த தொண்டுகள் பலவற்றின் சுவடுகள் இன்றும் அறியக் கூடியனவாயுள்ளன.
  • இங்கே எங்கு நோக்கினாலும் சைவத் தமிழ்ப் பெயர்களே கேட்கின்றன.
  • இன்றைக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே திருக்கோணேஸ்வரம் தேவாரம் பெற்ற திருத்தலமாக ஒளிவீசியது.
  • பாண்டியன் திருக்கோணமலையில் ‘இணைக்கயல்’ பொறித்துள்ளமை வரலாற்றுப் பெருமையாகும்.
  • ஐம்பொன்னாலான அழகு மிக்க மூர்த்தங்கள் இருக்கும் மண்டபம் – தேவ மண்டபம், கண்கொள்ளாக்காட்சி தருவதாகும்.
  • பறங்கியருக்குப் பின் ஆங்கியேர் காலத்தில் கிடைத்த வழிபாட்டு அனுமதியின்போது நடைபெற்ற மலைபூசை ஆகாச வெளியில் இன்றும் நடைபெற்று வருகின்றது.
  • நாடொறும் ஆறுகால பூசை ஆகம விதிகளின்படி தவறாமல் நடைபெறுகின்றன.
  • திருக்கோணேசப் பெருமானின் விழாக்களில் வெளிவாரியாக நடைபெறுவது ஆடி அமாவாசை விழாவாகும். கடலில் தீர்த்தமாடுவதற்கு பெருமான் எழுந்தருளும்போது, நகரிலுள்ள ஆலயங்களின் மூர்த்திகளும் தீர்த்தமாட அங்கே எழுந்தருளுவார்கள்.
  • ஆடி மாதம் போலவே, மகாமகத் தீர்த்த விழா, பங்குனி மாதத்தில் பூங்காவன மற்றும் தெப்பத் திருவிழா, மார்கழியில் திருவெம்பாவை விழா ஆகியன சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
  • நவராத்தி நாட்களில் ஸ்ரீ சக்ரபூஜை வெகுசிறப்பாக நடைபெறுகிறது.
  • ஆதிகோண நாயகர் திருக்கோயில் கற்கோயிலாகும்.
  • திருக்கோணேஸ்வரத்தின் தொல்புகழ் பாடும் தேவாரம், திருப்புகழ் தவிர பல புராணங்களும், பிரபந்தங்களும், கல்வெட்டுச் செய்திகளும் உள்ளன.பண் – புறநீர்மைதிருச்சிற்றம்பலம்

    நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீறணிதிரு மேனி
    வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
    கரைகெழு சந்துங் காரகிற் பிளவும் அளப்பருங் கனமணி வரன்றிக்
    குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே.


    கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
    பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடும் உடனாய்க்
    கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமுன் நித்திலஞ் சுமந்து
    குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே.


    பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார்
    கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக மாகமுன் கலந்தவர் மதின்மேற்
    தனித்தபே ருருவ விழித்தழல் நாகந் தாங்கிய மேருவெஞ் சிலையாக்
    குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே.


    பழித்திளங் கங்கை சடைமுடி வைத்துப் பாங்குடை மதனனைப் பொடியா
    விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த விமலனார் கமலமார் பாதர்
    தெழித்துமுன் அரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனும் இப்பியுஞ் சுமந்து
    கொழித்துவன் றிரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமா மலையமர்ந் தாரே.


    தாயினும் நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள்
    வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர்
    நோயிலும் பிணியுந் தொழலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலங்
    கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே.


    பரிந்துநன் மனத்தால் வழிபடும் மாணி தன்னுயிர் மேல்வருங் கூற்றைத்
    திரிந்திடா வண்ணம் உதைத்தவற் கருளுஞ் செம்மையார் நம்மையா ளுடையார்
    விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
    குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ் கோணமா மலையமர்ந் தாரே.


    இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

    எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலால் ஏத்திட வாத்தமாம் பேறு
    தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பும் இறப்பறி யாதவர் வேள்வி
    தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வுங்
    கொடுத்தவர் விரும்பும் பெரும்புக ழாளர் கோணமா மலையமர்ந் தாரே.


    அருவரா தொருகை வெண்டலை யேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க
    பெருவரா யுறையும் நீர்மையர் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன்
    இருவரும் அறியா வண்ணம்ஒள் ளெரியாய் உயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்குங்
    குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக் கோணமா மலையமர்ந் தாரே.


    நின்றுணுஞ் சமணும் இருந்துணுந் தேரும் நெறியலா தனபுறங் கூற
    வென்றுநஞ் சுண்ணும் பரிசினர் ஒருபால் மெல்லிய லொடும்உட னாகித்
    துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக்
    குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங் கோணமா மலையமர்ந் தாரே.


    குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக்
    கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன்
    உற்றசெந் தமிழார் மாலை யீரைந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
    சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.

No comments:

Post a Comment