
அநீதி, சர்வாதிகாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் போராடிய மூன்று பெண்களுக்கு, நேற்று நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த விழாவில், இந்தாண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் விருதுகள் வழங்கப்பட்டன.
நோபல் அறக்கட்டளை நிறுவிய ஆல்பிரட் நோபல், 1896, டிசம்பர் 10ம் தேதி, இத்தாலியில் காலமானார். ஆண்டுதோறும் அவரது நினைவு நாள் அன்று, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், நோபல் விருது வழங்கி கவுரவிக்கப்படுவர்.
இந்தாண்டுக்கான நோபல் விருதுகள், சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதன்படி நேற்று, நோபல் விருதுகள், உரியவர்களுக்கு வழங்கப்பட்டன. அறக்கட்டளை விதிகளின்படி முதலில், உலக அமைதிக்கான நோபல் விருதுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு விருதும், 15 லட்சம் டாலர் ரொக்க மதிப்புடையவை. லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன்,73, லைபீரிய பெண் உரிமைப் போராளி லீமா போவீ,39 மற்றும் ஏமனில் அதிபர் சலேவுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடி வரும் தவாக்குல் கர்மான்,32, ஆகியோருக்கு, இந்தாண்டுக்கான நோபல் விருதுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன் மூலம், நோபல் விருதுகள் என்றாலே அது ஆண்களுக்குத் தான் என்ற வாதம் முறியடிக்கப்பட்டதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.