இயற்கையாகவே கறையான்களுக்கு கண் தெரியாது.ஆனாலும் சில இடங்களில் 40அடி உயரமுள்ள புற்றுக்களைக் கூட எழுப்புகின்றன. இயற்கையிலேயே காது கேட்காத ஒரே விலங்கு பாம்பு.இது ஓசைகளை அதிர்வின் மூலம் உனர்கின்றது. ஒட்டகத்தினால் ஒலியை எழுப்ப முடியாது. ஆனால் இவைகள் எல்லாம் எவ்வளவு திறமையாக தொழிற்படுகின்றன.

ஒவ்வொருவரிடமும் நிச்சயமாக ஏதாவது ஒரு திறமை இருக்கும். ஆனால் பலர் தம்மிடம் உள்ள திறமைகளை உணர்வது இல்லை. உணர்ந்தாலும் சரியாக வெளிப்படுத்துவது இல்லை.
அங்கத்தில் குறைகளோடு பிறந்தாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் வாழ்வை வென்றவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், இருந்தார்கள். பிறவிக் குறைகள் உள்ளவர்கள் ஒரு வகை என்றால் விபத்துக்கள், நோய்களால் குறைபாடுகளை சந்தித்தவர்களும் சாதித்திருக்கிறார்கள். இவர்கள் எமக்கு சிறந்த வழிகாட்டிகள்.
சபர சாஸ்திரி, துவாரம் வெங்கடசாமி, வில்லியம் பிரஸ்காட் ஆகிய மூவரும் எதிர் பாராத விதமாகத் தமது விழிப்புலனை இழந்தவர்கள். சபர சாஸ்திரி இந்தியாவில் சிறந்த புல்லாங்குழல் மேதையாக விளங்கினார். இவர் சிறு வயதில் அம்மை நோய் வந்ததால் பார்வையை இழந்தார். துவாரம் வெங்கடசாமியும் சிறு வயதில் அம்மை நோய் வந்ததால் பார்வையை இழந்தார். இந்தியரான இவர் சிறந்த வயலின் மேதையாக விளங்கினார். வில்லியம் பிரஸ்காட் சட்டம் படித்தார். வழக்கறிஞராக வேண்டியவர் விபத்தில் பார்வையை இழந்தார். பின் ஒரு காரியதரசியின் துணை கொண்டு பல இலக்கிய நூல்களையும், வரலாற்று நூல்களையும் கற்றறிந்து பெரும் தேர்ச்சி பெற்றவர். பல வரலாற்று நூல்களை எழுதிப் புகழ் பெற்ற வரலாற்றாசிரியராகத் திகழ்ந்தார்.
இங்கிலாந்தை சேர்ந்த கென்றிப்பாசெட் பார்வை அற்றவர். திறமையாகக் கல்வி கற்று கேம்பிரிட்ஜில் அரசியல் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றினார். அரிய பல நூல்களை எழுதினார். பொதுத் தபாலதிபர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்திருக்கின்றார்.
வாழ்வில் வெற்றி பெற ஊனம் ஒரு தடையல்ல..............
No comments:
Post a Comment