flashvortex.

Tuesday, October 25, 2011

மாவீரன் நெப்போலியன் வாழ்கையில் நடந்தவை


மாவீரன் நெப்போலியன் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி 1769ம் ஆண்டு கோர்ச்சிக்கா எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை கார்லோ பொனபார்ட், இவரது தாயார் லெற்றீசியா ரமூளினு ஆவார்.

1799 ஆம் ஆண்டில் ஒரு சதிப்புரட்சியை நிகழ்த்தி அதன்மூலம் பிரெஞ்சுக் குடியரசின் முதல் கன்சல் ஆகப் பதவியில் அமர்ந்தான். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சின் பேரரசனானான். 19 ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படை எடுத்தான். தொடர்ச்சியான பல போர் வெற்றிகளினாலும், விரிவான கூட்டணிகளினாலும் அவன் ஐரோப்பாக் கண்டத்தையே தனது மேலாண்மைக்கு உட்படுத்தியிருந்தான்.


இவன் பல போர்களில் வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளான். 1812 இல் இடம் பெற்ற போர் தோல்வியில் முடிந்ததில் பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப் படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. இதிலிருந்து மீள்வதற்கு அவனால் முடியவில்லை.1813 இல், ஆறாவது கூட்டணி, லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள் நுழைந்தன. 1814 ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி எல்பாத் தீவுக்கு நாடு கடத்தியது.

ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான். எனினும் 1815 ஜூன் 18 இல் வாட்டர்லூ என்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். இதன் பின்னர் அவனது வாழ்நாளின் இறுதி ஆறாண்டுகளும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த  சென் கெலெனாத் தீவில் கழிந்தது.

போர்க்காலத்தில் ஒரு முறை மாவீரன் நெப்போலியன் ரஷ்ய நாட்டின் மீது படையெடுத்தான். அப்போது தன் படை வீரர்களிடம் இருந்து அவன் பிரிந்துவிட்டான். அச்சமயம், ரஷ்ய போர் வீரர்கள் அந்தப் பக்கமாக வந்தனர். அவர்களை நெப்போலியன் கண்ட உடனே அங்கிருந்த கடைக்குள் புகுந்தான். அது ஒரு தையற்கடை. அந்த தையற்காரனிடம், தன்னை காப்பாற்றும்படி வேண்டினான். கடைக்காரனுக்கு ரஷ்ய வீரர்களைக் கண்டால் பிடிக்காது. எனவே, அவனுக்கு உதவி செய்ய சம்மதித்தான். அவன் நெப்போலியனை பெரிய பாயில் படுக்க வைத்தான். அதை சுருட்டி ஒரு மூலையில் வைத்தான்.

ரஷ்ய வீரர்கள் அவனுடைய கடைக்குள் புகுந்தனர். நெப்போலியன் அங்கு ஒளிந்து கொண்டிருக்கிறானா? என்று கேட்டனர். தையற்காரன், "இங்கு யாரும் வரவில்லை,'' என்றான். ரஷ்ய வீரரின் பார்வையில் மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பாய் பட்டது. உடனே தன் வாளை உருவி பாய்ச் சுருளைக்குள் சொருகினான். நல்லவேளையாக அது நெப்போலியன் உடம்பினுள் பாயவில்லை. பிறகு ரஷ்ய வீரர்கள் வெளியே சென்றனர். அச்சத்துடன் இருந்த நெப்போலியன் பாயிலிருந்து வெளியே வந்தான். தையல்காரனை நன்றி உணர்வோடு பார்த்தான்.
"நான் பிரான்ஸ் நாட்டின் பேரரசன். என்னைக் காப்பாற்றியதற்காக மூன்று வரங்கள் தருகிறேன்; என்ன வேண்டும் கேள்,'' என்றான்.
தையற்காரன் சரியான முட்டாள். "இக்கட்டடத்தின் கூரைப் பகுதி மழைக் காலத்தில் ஒழுகுகிறது; அதைச் சரி செய்ய வேண்டும்,'' என்றான்.
ஆத்திரம் வந்தது நெப்போலியனுக்கு, "அது சரி செய்யப்படும். நீ நல்ல வரமா கேள்,'' என்றான்.

"இந்தச் சாலையின் கீழ்க் கோடியில் இன்னொரு தையற்கடைக்காரன் உள்ளான். அவனால் என் பிழைப்பு கெடுகிறது. அவனை வேறு ஓர் இடத்திற்குப் போகும்படி செய்ய வேண்டும்,'' என்றான். நெப்போலியனுக்கு அவனது முட்டாள்தனத்தை எண்ணி ஆத்திரம் பொங்கியது. "சரி! அது நிறைவேற்றப்படும்!'' என்றான் நெப்போலியன்.
"நீ எதைக் கேட்டாலும் என்னால் தர முடியும். நீ ஒரு பேரரசனிடம் கேட்கிறாய் என்பதை அறிந்து மற்றவர்களிடம் கேட்க முடியாததைக் கேள்,'' என்றான் நெப்போலியன்.

"ரஷ்ய வீரர்கள் நீங்கள் ஒளிந்து கொண்டிருந்த பாயில் வாளைச் சொருகிய போது நீங்கள் எந்த மன நிலையில் இருந்தீர்கள்?'' என்றான். "ஏய் நீ ஒரு முட்டாள்! இந்தக் கேள்வியை எப்படி என்னிடம் கேட்கலாம். உன்னை தண்டிக்கப் போகிறேன்!'' என்று கத்தினான்.

அச்சமயம் நெப்போலியனைத் தேடி அங்கு பிரெஞ்சு வீரர்கள் வந்தனர். அவர்களிடம், "இந்தத் தையற்காரனை சுட்டுக் கொல்லுங்கள்,'' என்று கட்டளையிட்டான். உடனே வீரர்கள் தையற்காரனை வெளியில் இழுத்துச் சென்று சுவரின் முன்னால் நிற்க வைத்தனர். அப்போது தையற்காரனுக்கு உடல் வெலவெலத்தது. வியர்வைக் கொட்டியது. மனம் படபடத்தது. அவன் மன்னிப்பு கேட்கும் முன்னர் நெப்போலியன் அங்கிருந்து சென்றான். தையற்காரனை குறி வைத்து வீர்கள் "ஒன்று, இரண்டு'' என்று சொன்னார்கள். மூன்று சொல்லுவதற்குள், "நிறுத்து!'' என்ற குரல் கேட்டது.

அங்கு நெப்போலியனின் உதவியாளன் வந்தான். "பேரரசர் இவனை மன்னித்துவிட்டார். இவனை விட்டு விடுங்கள்,'' என்று கூறி ஒரு துண்டு சீட்டை தையற்காரனிடம் தந்தான். அதில், "நான் எப்படிப்பட்ட மன நிலையில் இருந்தேன் என உனக்கு இப்போது புரிந்திருக்கும்!'' என்று எழுதியிருந்தது.




No comments:

Post a Comment