flashvortex.

Sunday, May 6, 2012

கருத்து சுகந்திரம்



ஒருவர் தான் விரும்பிய கருத்தை வெளியிடவும் பகிர்ந்து கொள்ளவும் ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை உள்ளது. உரிமைகளும் சுகந்திரங்களும் என உலக நாடுகளில் மத்தியில் கூறிக் கொள்ளும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு நாட்டில் மக்களின் வாய்கள் கட்டப்பட்டுள்ளது யாருக்கு தெரியும்?

யுத்தம் முடிவடைந்த பின்னர் ஜனநாயகம் நிலைத்து விட்டது. மக்களுக்கு பூரண சுகந்திரம் இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது. ஆனால் மக்கள் சுகந்திரமாக தமது கருத்துக்களை கூற முடியாத நிலையே காணப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்து மக்கள் அரசியல் அரசாங்கத்துக்கு எதிராக தமது கருத்துக்களை கூற மறுக்கின்றனர்.



இவர்கள் தாம் அரசாங்கத்துக்கு எதிராக கருத்துச் சொன்னால் உயிருடன் நடமாடுவோமா என்ற அச்சத்துடனேயே வாழ்கிறார்கள். தமக்கு எந்த பிரச்சனையும் வராது என்ற விடயங்களுக்கே கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஒரு விடயம் தொடர்பாக கருத்துக்களை கேட்பதற்கு அணுகியபோது தான் இவர்களின் கருத்துச் சுகந்திரம் எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரிந்தது.

அவர்கள் எங்களுக்கு நடந்தது தெரியும் நடப்பது தெரியும் ஆனால் சொல்ல மாட்டோம். நீங்கள் கேட்டுவிட்டு கண்டபடி எழுதுவீர்கள். அதற்கு பிறகு வரும் பிரச்சனைகளை யார் பார்த்துக் கொள்வார் என்று கிறீஸ் பூதம் தொடர்பான பிரச்சனைக்கு நாவாந்துறை மக்கள் கூறினார்கள். கிறீஸ் பூதம் தொடர்பான பிரச்சனைகள் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கினாலும் அது தொடர்பான பீதியில் இருந்து மக்கள் இன்னும் நீங்கவில்லை என்பது தெட்டத்தெளிவாகியது.

கிறீஸ் பூதம் தொடர்பாக அதிகளவில் பாதிக்கப்பட்டது நாவாந்துறை மக்களே. ஆனால் இவர்கள் இது தொடர்பாக எந்தவித தகவல்களையும் ஊடகங்களுக்கு தர மறுக்கின்றனர். எமக்கு குழந்தைகள் இருக்கின்றது. அவர்களின் எதிர் காலத்தை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். உங்களுக்கு கருத்து சொன்னால் அடுத்த கணமே இருப்போமா இல்லையா என்று கூட தெரியாது. நீங்களே பாருங்கள். எங்களை சுற்றி எத்தனை இராணுவமுகாம்கள் இருக்கின்றது. இதற்கு பிறகும் நாம் எவ்வாறு பிரச்சனைகள் பற்றி சொல்லுவது. சில சில இடங்களை பாருங்கள் தானாகவே உங்களுக்கு புரியும் என்று தெரிவித்தனர்.

இவர்கள் ஒரு இக்கட்டான சூழலிலேயே வாழ்கின்ற தன்மையை பார்க்க கூடியதாக இருந்தது. அங்கிருக்கும் மக்கள் பயத்தின் காரணமாக தமது கருத்துக்களை தர மறுக்கின்ற சூழலே காணப்படுகின்றது.

இது மட்டும் அன்றி தமிழர்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என எல்லோராலும் எதிர் பார்க்கப்பட்ட விடயம் இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம். இத் தீா்மானம் குறித்து எல்லோராலும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் யாருமே தமது கருத்துக்களை ஊடகங்களுக்கு முன் வைக்க மறுக்கின்றனர். நீங்கள் கூறும் கருத்துக்களால் எந்த பிரச்சனையும் வராது. இவற்றை நாம் வெளியிட மாட்டோம் என கூறினாலும் அதிகமான  மக்கள் தமது கருத்துக்களை வெளியிட மறுக்கின்றனர்.

இலங்கை அரசுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் எம்மை இணைத்து விடாதீர்கள் எமது குடும்பத்தை நிர்க்கதியாக்கிவிடாதீர்கள் என்று தெரிவித்தனர். வேறு விடயங்களுக்கு கருத்துக்கள் வேண்டும் என்றால் தருகின்றோம் ஆனால் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு மட்டும் கருத்துக்கள் தர மாட்டோம் என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக வேறு ஒரு பொதுமகனை சந்தித்த போது நான் உங்களுக்கு கருத்து தருகின்றேன். என்னை யார் பாதுகாப்பார். எனக்கு வரும் பிரச்சனைகளுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கூறுங்கள் நான் கருத்து தருகின்றேன் என்று கூறினார். உயிருக்கு யார் உத்தர வாதம் தருவது என்ற கருத்து எல்லோரினாலும் முன் வைக்கப்பட்டது.

இது மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் இப் பிரச்சனை தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் தர மாட்டாம். இப்போது தான் நாம் இலங்கை வந்துள்ளோம். நாம் உயிருடன் திரும்பி  எமது நாட்டுக்கு போக வேண்டும் தயவு செய்து எம்மை பிரச்சனைக்குள் இழுத்து விடாதீர்கள் என்று தெரிவித்தனர்.

ஜெனிவா பிரச்சனை தொடர்பாக கருத்துக்கள் கேட்டாலே அந்த இடத்தை விட்டு நீங்கி விடுகின்றனர். சிலர் அரசாங்கத்துக்கு எதிராக நா்ம் கருத்து தர மாட்டோம் வேண்டும் என்றால் அரசாங்கத்துக்கு  ஆதரவாக கருத்துக்கள் தருகின்றோம் என்று கூறியவர்களும் இருக்கின்றனா்.

பொது மகன் ஒருவர் குறிப்பிட்ட நபர் ஒருவரின் பெயரை கூறி அவர் அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக் கூறியதால் இன்று உயிரோடு இருக்கின்றாரா என்பதற்கு விடை தெரியாமல் இருக்கின்றோம். அது போலதான் கருத்துக்களை் வெளியிட்டால் எமது நிலைமையும். அதைவிட் மீண்டும் வெள்ளை வான் பிரச்சனை தொடங்கிவிட்டது. உங்களுக்கு கருத்து சொன்னால் அடுத்த கணமே என் வீட்டு வாசலில் வெள்ளை வான் நிற்கும் என்று கூறினார்.

இலங்கையில் இருக்கும் வரை ஒரு  கருத்தை சுகந்திரமாக சொல்ல முடியாத சூழலே இன்று உள்ளது. இலங்கையில் இல்லாத தமிழர்கள் இலங்கை மக்களுக்காக குரல் எழுப்புகின்றனர். இவர்களும் இலங்கை வந்துவிட்டால் வாய்பேசா மடந்தைகள் ஆகிவிடுவார்கள்.
                                       

No comments:

Post a Comment