flashvortex.

Saturday, May 19, 2012

நம்மைப் பற்றி நமக்கு......


Paristamilநம்மில் பலருக்கு மற்றவர்களைப் பற்றித் தெரியும். நம்மைப் பற்றி தெரிந்ததை விட அதிகமாக அடுத்தவர்களைப் பற்றித் தெரியும். அதுவும் அடுத்தவரின் குறைகள் நம் கண்ணுக்கு நன்றாகவே புலப்படும். அதை நம் இயல்பாகவே நாம் கொண்டு விட்டோம். நிலைக் கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்த்து ரசிக்க மனம் ஆசைப்படுவதைப் போல, நம் அகத்தை நாமே உணர்ந்து ரசிக்க நாம் ஏதாவது செய்திருக்கிறோமா என்று சொன்னால், பெரும்பாலானோர், ஏதோ தெரியும் என்ற பதிலைத் தான் தர விழைவார்கள்.
 
நம்மைப் பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ளும் பட்சத்தில், நம்மால் நம் நிறை, குறைகளை சமமாக உணர முடியும். நம் நிறைகளை நாமே வாழ்த்தவும், குறைகளை நாமே சீர்திருத்திக் கொள்ளவும் பேருதவியாகத் தான் தன்னை உணர்தல் தேவைப்படுகிறது.
 
நமக்கு மற்றவரின் நிறை, குறைகள் நன்றாகத் தெரிவதால், அவர்களிடம் இருக்கும் நிறைகளால், அவர்களுக்கு தேவைப்படும் போது, உதவ வேண்டும் என்ற எண்ணமும், அதே நேரம், குறைகள் தென்பட்டால், அவர்களிடம் விலகிச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்குகிறது. மற்றவருக்காக நாம் செலவு செய்யும் நேரம் தான் அதிகமே தவிர, நம்மை நாமே உணர, அதன் மூலம் கிடைக்கும் சந்தோஷத்தினைப் பெற ஒரு நாளில் குறைந்தது இருபது நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும்.
 
உடம்பிற்கு தேவையான உற்சாகம் கிடைக்க பல வழிகளில் நாம் முயல்கிறோம். வாரக் கடைசி நாளான சனிக்கிழமையில், ஒர் இடத்தில் கூட்டம் கூடுவதைப் பார்த்தாலே, தெரிந்து விடும். உற்சாகம் எவ்வாறெல்லாம் தேவைப்படுகிறது. அதனை எவ்வாறெல்லாம் தேடிக் கொள்கிறோம் என்று.
 
நம்மை நாமே விமர்சனத்திற்குள்ளாக்கிக் கொண்டாலே போதும், வெளி மனிதர்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகாமல் இருக்கலாம். எது புத்திசாலித்தனம்? நம்மை நாமே நேரம் ஒதுக்கி, கவனித்து சரி செய்து கொள்வதா? அல்லது மற்றவருக்கு அந்த வாய்ப்பை நல்குவதா?
 
பொதுவாகவே, அவரவர்க்கு அவரவர் நல்லவரே! அந்த கருத்து நமக்குள் இருப்பதனால் தாம், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நம் ஆளுமையில் எம்மாதிரி குணங்களை விலக்க வேண்டும், எவ்வகையான குணங்களை சேர்க்க வேண்டும் என்பது நமக்கு தெரிந்தாலே, நமக்கு நாம் எப்படி இருக்க வேண்டுமோ, அது சாத்தியமாகும். தன்னை அறிதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் பட்சத்தில் தான், நமக்கு என்ன தேவை, தேவையில்லை என்ற முடிவுக்கு வர இயலும். மனவியல், வாழ்வியலைப் புறக்கணித்து நம்மால் வாழ்க்கையை வாழ முடியாது. வாழ்ககையின் அடிப்படை ஆதாரமே, நம் வாழ்வை நாம எப்படி் சந்தோஷமாக அமைத்துக் கொள்வது, என்று சிந்திப்பதில் தான் இருக்கிறது.
 
நமக்குள், சிறு சிறு கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்தாலே போதும், நம்மை பற்றி நாம் தெரிந்து கொள்ள பிள்ளையார் சுழி போட்டதற்கு சமம். ஒரு சில மாதிரிக் கேள்விகளை இங்கு தர விழைகிறேன். கேள்விகளுக்குண்டான பதிலகளை ஆம்/இல்லை என்ற கோணத்தில் கொடுத்துக் கொள்ளவும்
 
1. நான் இரகசியமாக கர்வம் கொண்டவனா?/ கொண்டவளா?
 
2. என்னுடைய மோசமான குணங்களையும், தவறுகளையும் எதிர் நோக்க முடியாதவனா?/முடியாதவளா?
 
3. என்னால் மற்றவரின் கருத்துக்கள், அபிப்ராயங்களை ஏற்றுக் கொள்ள முடிகிறதா?
 
4. என் ஆலோசனைகளை மற்றவர் கேட்டு அதன் படியே நடக்க வேண்டும் என்று நான் எதிர்பார்பவனா?/ எதிர்பார்பவளா?
 
5. என் உணர்சிகள் என் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா? கட்டுப்படுத்த கஷ்டமாக உள்ளதா?
 
6. மற்றவர்களை திருப்தி படுத்த நான் அக்கறை எடுத்துக் கொள்கிறேனா?
 
7. மற்றவர்களை அனுசரித்துப் போகும் பழக்கம் என்னிடம் இருக்கிறதா?
 
8. நான் பார்கிற வேலைக்கும், கடமைக்கும், விசுவாசமில்லாத புகழைத் தேடுகிறேனா?
 
9. கவலைப்பட்டு மனசோர்வுக்கு ஆளாகிறேனா?
 
10. ஒரு வேலையை முடிக்கிற வரையில் அதனை ஈடுபாடோடு, உற்சாகமாக செய்கிறேனா?
 
11. மேற்கொள்ளும் காரியத்தில் எப்போதும் வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேனா?
 
12. என்னை சுற்றி நடக்கிற நிகழ்வுகளில் நான் ஆர்வம் கொண்டுள்ளேனா?
 
13. குடும்பத்தினரிடம் அன்பு செலுத்த அதிக பிரயத்தனம் மேற்கொள்கிறேனா?
 
14. மற்றவரின் தோழமையை விட எனக்கு நானே தோழன் என்று தனிமையில் இருக்க விரும்புகிறேனா?
 
15. நாம் முற்றிலும் விரும்பாத நபர்கள் இருக்கிறார்களா?
 
16. மற்றவர்கள் என்னிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றோ, உரிய மரியாதை தருவதில்லை என்றோ எண்ணுகிற போக்கு என்னிடம் இருக்கிறதா?
 
வாழ்க்கையில் எதிர்ப்பார்பதை நீங்கள் அறுவடை செய்யவில்லை என்கிற உணர்வு உங்களுக்கு இருந்தால், தவறு எங்கே என்று, உங்கள் பதிலின் மூலம் புரிந்திருக்கும். நீங்கள் மற்றவரிடம் எதிர்பார்க்கும் விஷயங்களில் நீங்கள் எப்படி, என்பதற்கு உங்களின் நேர்மையான பதில்கள், சரியான உத்திரவாதத்தை உங்களுக்குத் தரும்.

No comments:

Post a Comment