flashvortex.

Sunday, October 14, 2012

வாழ்வும் சாவும்................




ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டேன். இறப்பதற்கும் தயாராகி விட்ட அந்த நொடி என்ன நினைத்து என்னை பிடித்திருந்த உடும்புக்பிடி நீங்கியதோ தெரியாது. மீண்டும் தப்பிவிடுவேன் என்ற எண்ணத்தோடு இரு கைகளினாலும் தண்ணீரை தள்ளினேன்.

வாழ்க்கையில் நண்பர்கள் இருப்பார்கள்.அவர்களோடு இருக்கும் நொடிகளில் பல மறக்க முடியாத சம்பவங்கள் அமையும். ஆனால் இறப்பதற்கும் தயாராகி விடுவேன் என்று கூட நான் நினைக்கவில்லை.

காலை நேரம் என் நண்பர்களோடு வெளியே செல்வது என்று முடிவு செய்திருந்தேன். ஆனாலும் வழமை போல அல்லாமல் அன்று போக மனமில்லை. தொலைபேசியினை எடுத்து வரவில்லை என்று சொல்லுவோமா என்றும் நினைத்தேன். சிறிது நேரம் இருந்து விட்டு புறப்படுவதற்கு தயாராகினேன் அந்த நாள் 12.10.2012 என் வாழ்க்கையையே முடிவு செய்யப்போகும் நாளென்று தெரியாமல் பாட்டும் ஆட்டமும் என்று கும்மாளத்துடன் பயணத்தினை ஆரம்பித்தோம்.

போன வேலை முடிவிற்கு வர கடற்கரையில் எனது நண்பியுடன் மண் அள்ளி விளையாடியதினால் எங்கும் மண். கடல்நீரில் கழுவியும் போக வில்லை. ஆனாலும் மண்ணோடு நீண்ட தூரம் பயணித்து ஒரு மரத்தின் கீழே அமர்ந்தோம். நீரில் நனைந்ததினாலும் நடந்ததினாலும் சோர்ந்து போயிருந்ததினால் அதிக நேரம் உட்காந்து இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

அதன் பின் கூட்டாஞ்சோறு சமைப்பதற்கு எல்லோரும் வேலை செய்த நேரத்தில் நாம் மூவரும் மீன் வெட்டும் இடத்துக்க சென்று அங்கும் குழப்பிக் கொண்டிருந்தோம்(வெள்ளிக்கிழமை என்றதால் மற்றவர்கள் சாப்பிடமாட்டார்களாம் அதனால் வெட்டவும் வரவில்லை. நாங்களும் ஒரு காலம் அப்பிடித்தான் இருந்தோம். இப்ப திருந்தலையா?????)

ஒருவாறு மீனை வெட்டிய பிறகு ஒரு குளம் இருக்கிறது போய் கழுவி வாருங்கள் என்று கூற நண்பியும் 2 நண்பர்களும் கிளம்பிவிட்டனர். நான் சிறிது நேரம் கழித்து வேறொரு நண்பனின் செருப்பினையும் அணிந்து கொண்டு அவர்களிடம் சென்றேன். பின்பு குளத்தில் இறங்கி நீரினை அடித்து விளையாடியபடி என் நண்பியிடம் நாம் மண்ணை எல்லாம் கழுவிக் கொண்டு செல்வோம் என்று கூற உடனே நண்பனொருவன் வேணாம் வந்துவிடுங்கள் இல்லையென்றால் நான் நிற்கவா? என்று கேட்க வேண்டாம் என்று கூறி அனுப்பி வைத்து விட்டோம்.

நாம் இருவரும் மட்டும். சுற்றிவர நீர். மேற்பகுதி எங்கும் மணல். இது தான் நாம் இருக்கும் இடம்.

சரி வா கடற்கரைக்கு சென்று வருவோம் என்று கூற உடனே அவள் மறுத்து வேண்டாம் இக் குளத்திலேயே நிற்போம் என்று கூற அப்படியே நின்று விட்டோம்.

குளத்து நீர் இடுப்புக்க மேலே தண்ணீர். அப்போது ஏன் தண்ணீர் சுடுகிறது என்ன நடந்தது என்று கேட்டு சிரிக்க இங்கே வந்து பார் தண்ணீர் குளிர்கிறது என்றாள். அது தான் நாம் சந்தோசமாக பேசிய கடைசி வார்த்தைகள். அப்படி பேசியபடி தண்ணீரை கைகளினால் வலித்து கொண்டு நின்றதால் பள்ளத்துக்குள் சென்று விட்டாள். உடனே என் கைகளினை; கொடுத்து பிடித்துக் கொள் என்று கூற அவுளும் பிடித்துக் கொண்டாள்.என்னை ஒரேடியாக இறுக்கினாள். முதற் தடவை தண்ணீருக்குள் பாம்பு நெளிவதைப்போல சென்று வந்தோம். என் நண்பியி;ன் பிடி இறுகியதே தவிர தளர்ந்ததாக தெரியவில்லை.

மரணத்தின் வலி அன்று தான் என்னவென்று புரிந்தது. மூச்சுத் திணறலும் தொடர்ந்தது. என்னை பிடித்த பிடி விடவே இல்லை. நான் மட்டும் தண்ணீருக்கடியில். என் நண்பியின் பிடியிலிருந்த விடுபடுவதற்கு அதிகமாக போராட வேண்டி இருந்தது. அத்தனை நேரப் போராட்டத்திலும் என்னால் இரு தடவைகள் மட்டுமே வெளியே வர முடிந்தது. அந்த நொடி 'காப்பாற்றுங்க காப்பாற்றுங்க' ( மரண ஓலம்) என்று கத்தினேன்.அதைக் கூட முழுசான சொல்ல முடியவில்லை. 'காப்பா' என்று சொல்லும் போதே மீண்டும் தண்ணீருக்கடியில் சென்று விடுவேன். அதன் பின் என் நண்பி help help என்று கத்தினாள். யாருக்குமே கேட்கவில்லை.

என் திணறல் அதிகமாகி இருந்ததினால் போலும் என் இடுப்பை சுற்றி இரு கால்கள் இறுக்கியது. கண்கள் கால்களைப் பார்க்க கைகள் கால்களின் பிடியில் இருந்து விடுபட முயற்சி செய்ய என் கழுத்தை ஒரு கையும் தலைமுடியில் ஒரு கையும் இறுக்கியது. கால்களை விட்டு கழுத்தில் இருந்த கைகளிடம் என் கைகளை கொண்டு சென்றேன். இருந்து என்ன பயன். என் முயற்சி ஏதும் பலிக்கவில்லை. இறுக்கம் அதிகமாகிக் கொண்டே சென்றது.
ஒரு கணம் என் தம்பியும் இப்படித்தான் கஸ்ரப்பட்டிருப்பான் என நினைத்துக் கொண்டேன். என் குடும்பத்தினையும் கடைசியாக நினைத்துக் கொண்டேன். என் நண்பர்கள் வந்து பார்க்கும் போது நான் இறந்து மிதப்பேன் என நினைத்தேன். இறந்தாலும் பரவாயில்லை என் நண்பி என் உடலைப்பிடித்துக் கொண்டாவது தப்பிவிடட்டும் என்று நினைத்துக் கொண்டு கண்கள் சொருக கறுப்பு துப்பட்டா கண்ணின் மேலாக செல்ல சாவதற்கு தயாராகி விட்ட நிலையில் கண்களை மூடிக் கொண்டேன்.

தண்ணீரக்குள் பறப்பது போன்ற ஒரு உணர்வு. இறந்த பின் பிள்ளையாரிடம் செல்வேனா? அல்லது சொர்க்கமா? நரகமா என்று கூட யோசித்தேன். அந்த நொடி மீண்டும் மூச்சு திணறல். என்னை பிடித்திருந்த உடும்புப்பிடி என்னை விட்டு விலத்தியது போன்ற ஒரு உணர்வு. அப்படியே மேலே வந்தேன்.மீண்டும் சுவாசம். கண்ணைத் திறந்து பார்க்கும்போது நண்பி என்னை விட்டு முன்பாக சிறிது தூரத்தில் இருந்தாள். அப்படியே இரு கைகளிகாலும் நீரினை தள்ளினேன். அவளையும் அவ்வாறே செய்ய சொன்னேன்.

ஒருவாறு இடுப்பளவு தண்ணீருக்குள் வந்து பார்க்க நண்பி சிறிது தூரத்தில் இருந்தாள். மீண்டும் என் கைகளை பிடித்து மேலே வா என்று கூறி நீட்ட மீண்டும் அவள் பிடியில். மூச்சுத் திணறல். எவ்வாறு வெளியே வந்தோம் என்று தெரியாது. அதிகமாக தண்ணீர் குடித்திருந்தால் போலும்.வந்துவுடன் வாந்தியினை எடுத்தாள். நான் தண்ணீரினைக் குடிக்காததால் என் மூக்கு வழியாக தண்ணீர் ஓடிக் கொண்டு இருந்தது. (அன்று மாலை வரை நிற்கவே இல்லை.)

இருவரும் மணலின் மேல் விழுந்து படுத்தோம். உடனே அவள் காப்பாற்றுங்க காப்பாற்றுங்க என்று கத்தினாள். நண்பியை பார்த்து ஏன் கத்துகின்றாய் என பேசிவிட்டு அப்படியே குளத்தினை வெறித்துப் பார்த்தேன். அப்போது துப்பட்டா நீரில் என்னைப்போல தத்தளித்துக் கொண்டு இருந்தது. அப்போதும் ஏதோ கவிஞன் என்ற நினைப்பு கவிதையினை என் நா உதிர்த்தது.
சிறிது நேரத்தின் பின் எழுந்து நடந்தோம். ஒருவரை ஒருவர் பார்தோம் அப்படியே கட்டிப்பிடித்து அழுதோம்.( அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்தது)

என் நண்பி என்னை விட அதிகமாக பயந்திருந்தாள்.தான் இறந்து விடுவேன் என்று நினைத்ததாக கூறி கண்ணீரை உதிர்த்தாள். ஆனாலும் என் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ள வில்லை.

எனக்கு முன்பே போய் ஒரு சில நண்பர்களுக்கு சொல்லியும் விட்டாள். அவர்கள் என்னைத் தேடி ஆனாலும் எங்களில் நெருக்கமானவர்களில் ஒருவர் எட்டிக்கூட பார்க்கவில்லை. பின்பு மற்ற நண்பிகளில் ஒருத்தி வந்து என் கைகளினை பற்றினாள். மற்ற நண்பர்கள் இருக்கும் இடத்துக்கு போனபோது ஓ என அழ ஆரம்பித்து விட்டாள். அதுதான் உயிரோடு வந்து விட்டோம் அழாதே என்று கூறினேன். களைத்திருந்ததால் பாயில் படுக்க மற்ற இரு நண்பர்களும் வந்து அமர்ந்தனர். என்ன பேசாமல் இருக்கின்றாய் என்று கூற அதுதான் உயிரோடு இருக்கின்றீர்களே பிறகென்ன என்று சாதாரணமாக கூறினாள். அந்த சமயம் முள்ளுக் குத்துவது போன்ற ஒரு உணர்வு. மரணத்தின் வலி நமக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைத்துக் கொண்டு நாமிருவரும் நீரில் தத்தளித்ததைப் பேசிக் கொண்டோம்.

' நீ என்னை விட்ட பின்பு தான் நான் மேலே வந்தேன் என்று கூற உன்னை விட்ட பின்பு தான் அதிகமாக மூழ்கியதாக கூறினாள். அப்படியே அவளை பார்த்தேன். என்னை விட்டால் தனித்தனியாக இறந்து விடவேண்டும் என்பதினாலே உன்னை விடவில்லை என்றும் இந்த சிறுவயசில் இறந்து விடுவேன் என்றும் நினைத்ததாக கூறியதான் இப்போது நினைத்தாலும் சிரிப்பாக உள்ளது. தண்ணீரில் உள்ளவனை காப்பாற்ற பொருட்களையே கொடுக்க வேண்டும் கைகளை கொடுக்கக் கூடாது என்பதை தண்ணீரில் நான் தத்தளித்தபோது அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன்.
அதன் பின் இயல்பாக பேசிக் கொள்ள முடியவில்லை. நண்பர்களின் கிண்டல்களும் தொடர்ந்தது.

வீட்டிற்கு செல்ல வேண்டும் போல இருந்தது. அம்மாவின் மடிமேலே அழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சென்றபோது அப்பாவைக் கண்டதும் வார்த்தைகளே வரவில்லை. அன்று என்னை போகவேண்டாம் என்று கூறியிருந்தார். நானோ சொல் பேச்சு கேட்கவே இல்லை. இதன் பிறகே அம்மாவிடம் கூறினேன். சும்மாவே அம்மா என்னின் அதிக பாசம் சொல்லவே தேவையில்லை. அழ ஆரம்பித்து விட்டார். அதன் பின் அப்பாவிற்கு விடயம் போக மாயவன்தான் என் பிள்ளையை காப்பாற்றிவிட்டான் என மாயவா மாயவா என்றார். அதன் பின் அக்காக்களின் பேச்சுக்கள் மழையாய் பொழிந்தது. என் நண்பர்களோடு நான் செய்யும் பயணமும் முடிவுக்கு வந்தது. இன்னும் அம்மாவினதும் அப்பாவினதும் அழுகைகள் நிற்கவில்லை.
12ம் திகதி மீண்டும் பிறந்தேன். மரணத்தின் வலியை அனுபவித்தேன். சாவதற்கும் தயாராகி விட்ட அந்த நொடியை இன்னும் மறக்க முடியவில்லை. கண்களிலே அந்தக்குளமும் தண்ணீருக்குள் மூச்சுத்திணறியதும்தான் இப்போது என் கண்களில்......  



No comments:

Post a Comment