flashvortex.

Tuesday, October 30, 2012

பள்ளி இல்லாத கிராமம் கல்விக்கு ஏங்கும் சிறுவர்கள்


தெல்லிப்பளை கொல்லங்கலட்டி 22 வருடங்களின் பின் தமது சொந்த மக்களை பார்த்து பூரித்து நின்றது. அப் பூரிப்பில் மக்களும்.

ஆனால் வளம் கொழிக்கும்  இப் பூமியில் இன்னும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மீள்குடியேறி உள்ளனர் மக்கள். இங்கு தான் 5வயது சிறுமியான குலக்சிகாவின் உள்ளிட்ட  பல சிறுவர்களின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படப்போகிறது.



மீள்குடியேறிய குலக்சிகாவுக்கு  பள்ளிக்கு போக ஆசை. ஆனால் முன்பள்ளி கூட இல்லை. கல்விக்காக ஏங்கிதத் தவித்தாள் குலக்சிகா. அம்மா நான் பள்ளிக்கூடம் போகணும் என்று தனது மழலை மொழியால் தினமும் சிணுங்குவாள் என்றார் குலக்சியாவின் தாயான 38 வயதுடைய மகேஸ்வரி. தினமும் புத்தகப்பையோடும் பென்சிலோடும் பள்ளிக்கு செல்லத்துடிக்கும் இந்தச் சிறுமியின் அடிப்படை கல்வி உரிமை மறுக்கப்படுகின்றது.
இதற்கு யார் பொறுப்பு?

கொல்லங்கலட்டியில் முள்பள்ளி கட்டித்தருவார்கள் என்ற நம்பிக்கையிலேயே தனது மகளை பாலர் பாடசாலைக்கு அனுப்பாமல் வைத்திருந்துள்ளனர் பெற்றோர். இவர்களின் நம்பிக்கை இன்னும் பூர்த்தியாகவில்லை. இதனால் குலக்சிகாவை தெல்லிப்பளையில் உள்ள பன்னாலை என்ற இடத்துக்கு கூட்டிச் சென்று கல்வியை கற்க வைக்கின்றனர். நீண்ட தூரம் சைக்கிலி;ல் கொண்டு செல்லும் கட்டாயம் இவர்களுக்கு.
இந்தக் கிராமத்தில் குலக்சிகா போன்று பல சிறுவர்கள் வேறு இடங்களில் கல்வியை பயில வேண்டிய சூழ்நிலைக்கு ஆள்பட்டு இருக்கின்றார்கள். இதற்கு கொல்லங்கலட்டி கிராமத்தில் முன்பள்ளி இல்லாமை மட்டுமே காரணம். இங்கிருக்கும் சிறுவர்கள் வேறு இடங்களுக்கு சென்று கல்வி பயில வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

செடிகள் பூமியில் செழித்து வளர்வதற்கு ஆரம்பப்புள்ளி சரியானதாக அமைய வேண்டும் சிறுவர்கள் நாளைய உலகை ஆளாப்பிறந்தவர்கள். அவர்களின் கல்விக்கான அடித்தளமும் சிறப்பானதாக அமைய வேண்டும். இதற்காக ஒரு தளம் இல்லாத ஒரு சூழ்நிலையிலேயே கொல்லங்கலட்டி சிறுவர்கள் உள்ளனர்.

இங்கே வசிக்கும் சிறுவர்களின் பெற்றோர்கள் நான்கு மாதங்கள் ஒரு வருடங்கள் என பிள்ளைகளை கல்விக்கு வேறு இடங்கள் அனுப்பாமல் இருக்கின்றனர். இதனால் ஒரு சிறுவரின் கல்வி உரிமை மீறப்படுகின்றது. சிறுவர் உரிமைகள் பற்றிய ஜக்கிய நாடுகளின் சமாயத்தில் உறுப்புரை 28ன் படி எல்லாப் பிள்ளைகளும் கல்வி கற்கும் உரிமை உடையவர்கள். அரசு ஆரம்பக்கல்வியேனும் கட்டாயமாகவும் இலவசமாகவும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  கொல்லங்கலட்டி சிறார்களின் ஆரம்பக் கல்வியினை இரண்டு மூன்று மைல்கள் தொலைவில் கொண்டு சென்று விட வேண்டிய தேவை ஏற்ப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஒரேஒரு காரணம் மட்டுமே. தமது சொந்த இடங்களில் பாலர் பாடசாலை இல்லாமையே.

ஒரு சிறுவன் சாதாரணமாக ஒரு வருடங்கள் கல்வி கற்காமல் முதலாம்ந் தரம் செல்லும் போது மற்றைய பிள்ளைகளின் கல்வியின் ஓட்டத்தோடு சேர்ந்து ஓட முடியாமல் போகும் சந்தர்ப்பம் இருக்கின்றது. முறையாக ஆரம்பக் கல்வியை கற்காமல் பாடசாலைக்கு செல்லும் போது அவர்களுக்கு கூச்சமும் பயமும் சேர்ந்து கொள்ளும். இதனால் பாடசாலைக் கல்விக்கு ஏற்ப்ப தங்களை தயார்ப்படுத்துவதற்கு கால அவகாசம் எடுக்கும். அந்த கால எல்லையில் பாடசாலைக் கல்வியை எடுக்கும்போது அவர்களது முதற்தரக்கல்வி பாதிக்கடையும்.

' நான்கு மாதங்கள் எனது பிள்ளையை படிக்க விடாமல் வைத்திருந்தே பன்னாலையில் உள்ள முன்பள்ளியில் தற் சமயம் சேர்த்திருக்கின்றேன்' என்றார் இதே ஊரைச் சேர்ந்த 42 வயதுடைய பாலசரோஜினி. கொல்லங்கலட்டி கிராமத்தில் பாலர் பாடசாலை எப்படியும் இயங்கிவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தேன். ஆனால் ஆரம்பப் பாடசாலை இயங்குவதாக தெரியவில்லை இதனால் தற்ப்போது வேறு இடத்துக்கு பிள்ளையை கொண்டே விட்டுக் கொண்டு கூட்டிவருவேன்;. எங்களது பிள்ளைகளாவது எங்களைப் போல் கஸ்ரப்படாமல்  படித்து நல்ல ஒரு வேலையில் இருக்க வேண்டம் என்று கண்ணீர்த்துளிகள்; தனது கண்களை விட்டு வழிந்தோடிவிடும் என்பதனால் கண்களை துடைத்துக் கொண்டு கூறினார்.

கொல்லங்கலட்டி கிராமத்தில் 40தொடக்கம் 45 பிள்ளைகள் வரை தமது முன்பள்ளி படிப்பை தொடருகின்றார்கள். அவர்கள் எல்லோரும் வேறு இடம் சென்று படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இக் கிராமத்துக்கு இருக்கும் முன்பள்ளியை சீராக்கி ஆசிரியரை பணிக்கு அமர்த்த வேண்டும் என்பது கொல்லங்கலட்டி மக்களது கருத்து.

முன்பள்ளி இயங்கி வந்த கட்டடத்தில் தற்ப்போது கிராம சேவையாளர் பிரிவு இயங்கி வருகின்றது. சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு ஆசிரியர் இல்லாத நிலையே காணப்படுகின்றது. பாலர் பாடசாலை ஒன்று ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் எடுத்தாலும் ஆரம்பத்தோடே ஸ்தம்பித்து உள்ளது.

' நான் படித்த பாடசாலையில் எனது பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை என்பது கவலைக்குரியது' என்றார் கொல்லங்கலட்டியில் கடை வைத்திருக்கும் 38 வயதுடைய பாலரூபன். மீள்குடியேறி ஒரு வருடம் ஆனாலும் இன்னும் பாலர் பாடசாலை இல்லாதது குழந்தைகளின் கல்வியை பாதிக்கும் என்பதனால் நான் இன்னும் சொந்த இடத்துக்கு எனது பிள்ளைகளை கூட்டி வரவில்லை என்றார்.

இது தொடர்பாக துஃ232 பிரிவைச் சேர்ந்த கிராம சேவையாளர் வரதராஜா கூறுகையில் 'மக்கள் இன்னும் முற்று முழுதாக குடியேற வரவில்லை. அவர்கள் வரும் பட்சத்தில் எல்லா வசதிகளும் கிராமத்துக்கு வரும். ஆனாலும் வருகின்ற வருடத் தொடக்கத்தில் எப்படியும் முன்பள்ளி ஆரம்பித்து விடுவோம். ஆசிரியர் பற்றாக்குறையினாலேயே தற்போது இயங்காமல் இருக்கின்றது.' என்றார்.

தமது பிள்ளைகளின் கல்வியை கருத்திற் கொண்டு எத்தனையோ குடும்பங்கள் இன்னும் சொந்த இடத்துக்கு திரும்பவில்லை. ஏனெனில் பாலர் பாடசாலை மட்டுமன்றி கொல்லங்கலட்டி தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிபரை நியமித்த அளவிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்க இங்கிருக்கும் மக்கள் எந்த நம்பிக்கையில் மீள் குடியேற வருவார்கள்? இங்கிருக்கும் பாடசாலைகளை மீளமைத்துக் கொடுப்பதன் மூலம் மீதி இருக்கும் கிராம மக்கள் வந்து குடியேறுவார்கள் என நம்பப்படுகின்றது.
ஒரு சில நிறுவனங்கள் கொல்லங்கலட்டி கிராமத்துக்கு சென்றாலும் அவர்கள் ஆரம்பப் பாடசாலையை கருத்தில் எடுத்துக் கொள்ளாத நிலையே நிலவி வந்துள்ளது.

ஒரு காலத்தில் சிறார்களால் பூத்துக்குலங்கிய இவ் அறிவுக்கூடம் இன்று யாருக்கும் அறிவுப்பசியை ஊட்டாது பட்ட மரம் போல வெறுமையாக காட்சி அளிக்கின்றது. 1990ம் ஆண்டுகளுக்கு முன்னர் நான் எத்தனை சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருப்பேன்.இன்று யாருமே இல்லாமல் இருக்கும் முன்பள்ளியினைப் பார்த்தால் கவலையாக இருக்கின்றது. அதே சமயம் இன்று கிராமசேவையாளர்பிரிவு இதில் தான் இயங்கி வருகின்றது என்று கவiயுடன் 90 காலப்பகுதியில் முன்பள்ளி ஆசிரியராக இருந்த செ.பாக்கியம் தெரிவித்தார்.

சிறுவர்களுக்கு ஆரம்பக்கல்வி முக்கியமானதொன்று. அடிப்படைக் கல்வியை சிறந்த முறையில் கற்றுக் கொடுத்தால் மட்டுமே அவர்கள் எதிர்காலத்தில்  பெரிய பதவிகளில் இருப்பதற்கு வழிவகுக்கும். ஆனால் முன்பள்ளி இல்லாமை விளையும் பயிரை முளையிலேயே கிள்ளுவதுபோல அமைகின்றது.

மீள்குடியேறி இருக்கும் கொல்லங்கலட்டி கிராம மக்கள் எமது கிராமத்துக்கு முன்பள்ளி ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதனை ஓரே கருத்தாக கூறுகின்றனர். நீண்ட தூரம் சென்று பிள்ளையை கல்வி கற்க வைப்பதனால் அவர்கள் வீடுகளில் படிக்கும் நேரம் குறைவாக அமையும். இதுவே தமது கிராமத்தில் கல்வியை கற்கும்போது அவர்கள் வீடுகளிலும் அதிகமான நேரம் தமது கல்விஅறிவிற்காக செலவழிப்பார்கள்.

சிறுவர்கள் கல்வியினை ஒரே சீராக கற்கும் போது அவன் பின் தங்கிய நிலைக்கு இருக்க வேண்டிய சூழ்நிலை அமையாது. இதனால் சிறுவர்கள் ஊக்கத்தோடு பாடசாலை கல்வியினை தொடர்வார்கள். இவ்வாறு இருந்தால் சிறுவர்கள் வேலைக்கு போகும் சந்தர்ப்பங்கள் மற்றும் பாடசாலையில் புறக்கணிக்கப்படுதல், அவர்கள் பாடசாலைக்கு ஒழுங்காக செல்லுதல் போன்றன சிநப்பாக நடைபெறும்.

அறிவு ஆளும் இவ் உலகை என்பது பாடசாலைகளில் எழுதப்பட்ட வாக்கியம். கொல்லங்கலட்டி சிறுவர்களுக்கு அறிவு விதையை வளர்ப்பதற்கு அவர்களுக்கான முன்பள்ளியை அமைத்துக் கொடுப்பதற்கு உரியவர்கள் கவனம் எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment