flashvortex.

Thursday, November 3, 2011

டைனோசர்கள் அழிந்தது விண்கற்களாலா?

பூமியில் சுமார் 1300 வகையான `ஊர்வன’ இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், டைனோசர்.ஒரு காலத்தில் இது பூமியின் முக்கிய உயிரினமாகத் திகழ்ந்தது. இவ்வளவு பெரிய உயிரினம் எப்படி அழிந்துபோனது என்பது இன்றைக்கும் புதிராக உள்ளது. ஏறக்குறைய 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் உலவித் திரிந்திருக்கின்றன டைனோசர்கள். அப்போது இவைதான் பூமியின் மிகப் பெரிய உயிரினங்கள். மிக அதிகமான எடை, மாறிவந்த காலச்சூழலால் டைனோசர்கள் மடிந்திருக்கலாம் என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. ஆனால் 1980-ல் லூயிஸ் அல்வரேஸ் என்ற புவி ஆராய்ச்சியாளர் ஓர் ஆய்வு செய்தார். அதன்படி, 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான நில அடுக்குகளில் `இரிடியம்’ என்ற தனிமம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பூமியில் மிக அரிதாகக் காணப்படும் தனிமம். விண்கற்களில் இந்தத் தனிமம் அதிகமாக உள்ளது. எனவே, பூமியில் விழுந்த விண்கல்லில் இருந்து இரிடியம் வந்திருக்கக்கூடும் என்று லூயிஸ் கூறினார். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில், பல மைல் அகலம் கொண்ட ஒரு ராட்சத விண்கல், பூமியில் மோதியிருக்கலாம், அந்த மோதலால் டைனோசர்கள் அழிவைச் சந்தித்திருக்கக்கூடும் என்று லூயிஸ் தெரிவிக்கிறார்.

ஆனால் இன்றைய பறவைகள், டைனோசர்களில் இருந்து பரிணமித்தவைதான். எனவே ஒரு விண்கல் மோதலால் டைனோசர்கள் முற்றிலுமாக அழிந்துபோயின என்பதை ஏற்க முடியாது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர். ஆக, டைனோசர்களின் அழிவு குறித்த புதிர் முற்றிலுமாக விடுபடவில்லை என்பதே உண்மை.

No comments:

Post a Comment